Delhi: 'அடுத்த முதல்வர் யார்?' - ரேஸில் இருக்கும் 5 பேர்! - யார் அவர்கள்?!
கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது பாஜக.
பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி டெல்லியில் நிலவி வந்தது. ஆனால், போட்டியின் இறுதியில் பாஜகவும், ஆம் ஆத்மியும் தான் கரை கண்டுள்ளது. பாஜக 48 இடங்களை பிடித்து வெற்றி வாகை சூடியுள்ளது. ஆம் ஆத்மி 22 இடங்களை பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
பாஜகவும், காங்கிரஸும் 'முதல்வர் வேட்பாளர் இவர் தான்' என்று யாரையும் முன்னிறுத்தாமல் தான் தேர்தலில் களம் கண்டது. இப்போது பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், 'யார் டெல்லியின் முதலமைச்சர்?' என்ற கேள்வி எழுந்துள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/ih5cyyth/IMG_BJP_PC_KEJRIWAL_DELH_2_1_S2AA9HM4.jpg)
இந்தக் கேள்விக்கு டெல்லியின் பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா, 'அந்த முடிவு மத்திய பாஜக தலைவர்களால் எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
இப்போதைக்கு இந்த ரேஸில் மொத்தம் 5 பேர் உள்ளனர்.
முதலாவதாக, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் வர்மாவிற்கு முதலமைச்சர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. கெஜ்ரிவாலை வீழ்த்தியவர் என்பதைத் தாண்டி, இவருடைய தந்தை சாஹிப் சிங் வர்மா டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் என்பது இவருக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்.
இரண்டாவதாக, விஜேந்தர் குப்தா. இவர் தான் இப்போது வரை டெல்லி சட்டசபையில் பாஜகவின் முக்கிய முகமாக இருந்தார். இவர் இதுவரை டெல்லி சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார்.
மூன்றாவதாக, சதீஷ் உபாத்யாய். இவர் டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவர் ஆவார்.
நான்காவதாக, மஜீந்தர் சிங். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பஞ்சாப்பில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அங்கே ஆம் ஆத்மி இப்போது ஆட்சியில் உள்ளது. அதனால், அங்கே ஆட்சியை பிடிக்க, டெல்லியில் பாஜக மஜீந்தர் சிங்கை முதலமைச்சராக நியமிக்கலாம்.
ஐந்தாவதாக, ஹரிஷ் குரானா. இவரும் முன்னாள் டெல்லி முதலமைச்சர் மதன் லால் குரானாவின் மகன் ஆவார். அது மட்டுமல்லாமல், இவருக்கு அரசியலிலும், கட்சியிலும் அனுபவம் அதிகம்.
இவர்களில் யார் டெல்லியின் முதல்வர் என்று இன்று ஆலோசனை செய்து முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.