தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
'தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது..?' - புள்ளிவிவரங்களை அடுக்கும் ஆர்.எஸ்.பாரதி
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில்...
"மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்காததால் மக்கள் மத்திய அரசு மீது கோபமாக இருக்கிறார்கள். இதற்கு திருவண்ணாமலை உள்ளிட்ட பொதுக்கூட்டங்களில் கூடிய மக்களின் கூட்டமே சாட்சி.
ஏன் தமிழ்நாட்டின் மீது மத்திய அரசுக்கு இந்த ஓரவஞ்சனை... தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது? எல்லா வகைகளிலும் மத்திய அரசுக்கு பொருளை ஈட்டி தரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வரி பங்களிப்பில் கூட, 6 லட்சத்து 28 ஆயிரம் கோடியை தமிழ்நாடு தருகிறது. அதில் மத்திய அரசு திருப்பி கொடுப்பது என்னவோ 58,000 கோடி. 6-ல் ஒரு பங்கு கூட கிடையாது. இது எந்த விதத்தில் நியாயம்...?
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/p8q6i56w/67a65c0ea6baa.jpg)
ஆனால், உத்தப்ரபிரதேசம், பீகார், குஜராத் மாநிலங்களுக்கு கேட்காமலேயே மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதற்கு தான் அண்ணா, கலைஞர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்தக் கண்டன ஆர்பாட்டங்களை நடத்துகிறார்.
'நானும் தமிழச்சி தான்' என்று கூறும் நிர்மலா சீதாராமன் நடிக்கிறார். நிதியமைச்சர் ஆன பிறகு, நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு என்ன செய்துள்ளார்? நாம் கொடுக்கும் பணத்தைக் கூட திரும்ப கொடுக்கும் யோக்கியம் மத்திய அரசுக்கு இல்லை. எந்த அளவுக்கு தமிழ்நாடு வெள்ளத்தில் பாதித்திருந்தது? சேர வேண்டிய நிதியையாவது கொடுங்கள் என்று கேட்டாலும், அவர்கள் கொடுக்கவில்லை. 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் பணம் கொடுக்கவில்லை.
இதற்கு தமிழ்நாட்டை பழி வாங்க வேண்டும் என்ற மத்திய அரசின் எண்ணமே காரணம். மேலும், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் புரட்சிகரமான திட்டங்களும் காரணம். கனடாவில் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டியுள்ளார்கள். ஐ.நா சபையில் ஸ்டாலின் பேசுபொருள் ஆகியுள்ளார். அந்த அளவுக்கு தமிழ்நாட்டின் புகழ் உச்சிக்கு போய் உள்ளது. இதை மோடியின் அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் நடிக்கிறார். அவர் முதல்வராக இருந்த காலத்தில், ஆளுநர் ஆட்சியாளர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்ததையொட்டி, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தலைமையில் நாங்கள் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்பாட்டம் நடத்தினோம். நாங்கள் ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும், மாநில உரிமைகளை காப்பதில் மிகுந்த ஆதரவுடன் திமுக செயல்படும்" என்று பேசினார்.