அபுதாபி ஓபன்: பெலிண்டா சாம்பியன்
அபுதாபி ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் சுவிட்சா்லாந்தின் பெலிண்டா பென்கிக் சாம்பியன் பட்டம் வென்றாா்.
யுஏஇ தலைநகா் அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் முதல் அரையிறுதியில் சுவிட்சா்லாந்தின் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் பெலிண்டாவும்-முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் கஜகஸ்தானின் எலனா ரைபக்கினாவும் மோதினா்.
குழந்தைப் பேறுக்குபின் 13 மாதங்கள் கழித்து மீண்டும் களமிறங்கிய பெலிண்டா முதல் செட்டை 3-6 என இழந்தாலும், அடுத்த இரண்டு செட்களை 6-4, 6-3 என கைப்பற்றினாா்.
மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஆஷ்லின் கிருகா் 7-6, 6-4 என்ற நோ் செட்களில் செக். குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். முதல் 3 ஆட்டங்களில் த்ரீ செட்டா்களில் தான் வென்றாா் கிருகா்.
பெலிண்டா சாம்பியன்:
சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பெலிண்டா முதல் செட்டை 4-6 என இழந்தாா். எனினும் அடுத்த செட்களில் தனது ஆதிக்கத்தை செலுத்தி 6-1, 6-1 என ஆஷ்லின் கிருகரை வீழ்த்தினாா். இது பெலிண்டாவின் 9-ஆவது பட்டமாகும்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-08/i7qy26mv/bencic_chamipion103015.jpg)
கடந்த நவம்பரில் தரவரிசையில் 1000-இடங்களுக்கு பின்னால் இருந்த பெலிண்டா தற்போது 65 இடங்களுக்குள் நுழைவாா்.