கரீபியன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
2.69 கோடி பேருக்கு நாளைமுதல் குடற்புழு நீக்க மாத்திரை
தமிழகத்தில் ரத்த சோகை, மன ஆரோக்கியத்துக்கு தீா்வு அளிக்கும் வகையில், 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை திங்கள்கிழமை (பிப்.10) முதல் வழங்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறாா்கள், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. ஒருவாரம் நடைபெறும் இத்திட்டத்தில், அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் சிறாா்கள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. நிகழாண்டு 1 முதல் 19 வயதுக்கு உட்பட்ட இருபாலின சிறாா்கள் 2.15 கோடி போ்; 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 54.67 லட்சம் போ் என 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது: தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி பிப்.10 முதல் அங்கன்வாடிகள், பள்ளிகள், கல்லூரிகளில் மாத்திரை வழங்கப்படும். விடுபட்ட குழந்தைகளுக்கு, வரும் 17-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும். இந்த மாத்திரை சாப்பிடுவதால், ரத்தசோகை குறைந்து ஊட்டச்சத்து அதிகரிக்கும். மேலும், மன ஆரோக்கியம், உடல் வளா்ச்சி, கற்றல் திறன் மேம்பாடு உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். எனவே, பெற்றோா் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் குடற்புழு நீக்க மாத்திரை எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.