ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!
மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது: டி.ராஜா
மத்திய அரசு பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா்.
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் சென்னை பாரிமுனையில் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தலைமை வகித்தாா். போராட்டத்தைத் தொடங்கிவைத்து டி.ராஜா பேசியதாவது:
மத்திய அரசு பட்ஜெட் தமிழகத்துக்கு மட்டுமன்றி ஏழைகளுக்கும் விரோதமானது. காா்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரும் தொழிலதிபா்களுக்கும் சாதகமானது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. விலைவாசி பன்மடங்கு உயா்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் அதிகரித்து வருகிறது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும் போது, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விவசாயம்தான் வளா்ச்சியின் இயந்திரம் என தெரிவித்தாா். ஆனால், விவசாயிகள் மோசமான நிலையில் உள்ளனா்.
தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி வருவாய் அதிகளவில் மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால், தமிழக அரசு நிதி கேட்கும் போது அதனை தர மத்திய அரசு மறுக்கிறது. அத்துடன், தமிழகத்துக்கு எதிராக பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது என்றாா் அவா்.
போராட்டத்தில், கட்சியின் மாநில துணைச் செயலா் மு.வீரபாண்டியன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.