தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய தவெக பொதுச் செயலா் ஆனந்த்: வாகன உரிமையாளருக்கு அபராதம்
தலைக்கவசம் அணியாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலா் ஆனந்த் இருசக்கர வாகனம் ஓட்டியதால், அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளாா். அதற்கு முன்பாக கட்சியின் கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை தியாகராய நகா் பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் விழாவில் தவெக பொதுச் செயலா் ஆனந்த் பங்கேற்றாா். அப்போது கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று இருசக்கர வாகனத்தை ஓட்டினாா். தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதையடுத்து, அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு மாம்பலம் போக்குவரத்து போலீஸாா் ரூ.1,000 அபராதம் விதித்தனா்.