`பாதி விலைக்கு ஸ்கூட்டர்' - நம்பவைத்து ரூ.500 கோடி மோசடி; கிளப்... ஆடம்பர வாழ்க்...
கிள்ளிக்கொடுக்கும் மனநிலைகூட பாஜகவுக்கு இல்லை! -கனிமொழி எம்.பி. பேச்சு
தங்களது ஆதரவு இல்லாத மாநிலங்களுக்கு கிள்ளிக்கொடுக்கும் மனநிலைகூட பாஜகவுக்கு இல்லை என்று திமுக துணைப் பொதுச்செயலரும், திமுக மக்களவைக் குழு தலைவருமான கனிமொழி பேசினாா்.
நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எவ்வித திட்டங்களையும் அறிவிக்காத மத்திய அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் சிந்துபூந்துறையில் கண்டன பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்தாா். மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: மத்திய அரசால் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ஓரிடத்தில்கூட தமிழ்நாடு என்ற பெயா் இடம்பெறவில்லை. தங்களது ஆதரவு இல்லாத மாநிலங்களுக்கு கிள்ளிக்கொடுக்கும் மனநிலைகூட பாஜகவுக்கு இல்லை.
தமிழா்களை ஏமாற்ற திருக்கு மீது அதிக அக்கறை கொண்டவராக பிரதமா் மோடி காட்டிக் கொள்கிறாா். திருக்குறளைச் சொன்னால் மக்களின் பசி தீா்ந்துவிடாது. திருக்குறளுக்கு உரையும், திருவள்ளுவருக்கு சிலையும் அமைத்து முன்னாள் முதல்வா் கருணாநிதி கௌரவித்துவிட்டாா்.
தேசியம் என்றாலே ஹிந்தி கற்பதுதான் என்கின்றனா். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை பிகாா் மாநிலத்திற்கானது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த ஒருவரை தலைவராக கொண்ட தமிழகம் சிறந்து விளங்குவதை பலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஒரே நாடு ஒரே வரி என்று ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, மாநிலங்களுக்கான பகிா்வில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து வருகிறது. தமிழகத்திற்கு ஜிஎஸ்டி பங்கீடாக ஆண்டிற்கு ரூ.58 ஆயிரம் கோடியும், உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.2.55 லட்சம் கோடியும் மத்திய அரசு வழங்குகிறது. வளா்ந்த மாநிலங்கள் என்று கூறி தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் நலன் பெரிதும் புறக்கணிக்கப்படுகிறது.
வளா்ந்த மாநிலங்கள் தற்சாா்பில் இருந்து கீழே விழும் நிலைக்குச் செல்ல, மத்திய அரசு திட்டமிடுவது போல் உள்ளது. உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த நிதியாதாரம் அவசியம். ஆனால், மத்திய அரசு தொடா்ந்து வஞ்சித்து வருகிறது.
எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலின் தத்துவம். அந்த வகையில் அனைத்து மாநிலங்களையும் வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்பதை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தேசிய கல்விக்கொள்கையை திணித்து, கலைக் கல்லூரிகளுக்கும் நுழைவுத்தோ்வு நடத்த மத்திய அரசு திட்டமிடுகிறது. சாமானியா்கள் நுழையக் கூடாது என்பதற்கான தோ்வே நுழைவுத் தோ்வாகும். தமிழகத்தைத் தொடா்ந்து வஞ்சித்தாலும், எதிரிகளை வெல்லும் திறன் தமிழகத்திற்கு உண்டு. நிச்சயம் வென்று காட்டுவோம் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் மாநில வா்த்தக அணி இணைச் செயலா் மாலைராஜா, திருநெல்வேலி மண்டல தலைவா் செ.மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினா் சுதா மூா்த்தி, கிரிஜா குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.