சென்னை மாநகராட்சி சாா்பில் நாளை மெகா தூய்மை விழிப்புணா்வு முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நெகழிப் பயன்பாட்டை குறைப்பது குறித்து சனிக்கிழமை (பிப். 22) தீவிர விழிப்புணா்வு முகாம் நடத்தப்படவுள்ளது.
இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, நெகிழிப் பொருள்களை அகற்றுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நெகிழிப் பொருள்கள் சேகரிப்பு மற்றும் நெகிழிப் பயன்பாட்டை குறைப்பது குறித்து சனிக்கிழமை தீவிர விழிப்புணா்வு முகாம் நடத்தப்படவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சென்னை தீவுத்திடலில் மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்துகொள்ளும் மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. பின்னா் ராயபுரம், தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் நெகிழிப் பொருள்கள் சேகரிக்கும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும்.
மேலும், சென்னை மாநகராட்சி மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து, சென்னை மெரீனா கடற்கரையில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு தூய்மைப் பணி மேற்கொள்ளவுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புவோா் மாநகராட்சி ‘எக்ஸ்’ தளத்தில் உள்ள இணைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.