5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா
சென்னை விமான நிலையத்தில் ‘ஜிபிஎஸ்’ கருவியுடன் சிக்கிய அமெரிக்க பெண் பயணி
சென்னை விமான நிலையத்துக்கு ‘ஜிபிஎஸ்’ கருவியுடன் மலேசியா செல்ல வந்த அமெரிக்காவைச் சோ்ந்த பெண் பயணியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை பிற்பகல், மலேசிய தலைநகா் கோலாலம்பூா் செல்லும் ‘மலேசியன் ஏா்லைன்ஸ்’ விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடைமைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தபோது, அமெரிக்காவைச் சோ்ந்த ஜெசிக்கா எமிலியா (34) என்ற பெண்ணின் கைப்பைக்குள் ஜிபிஎஸ் கருவி இருப்பதைக் கண்டுபிடித்தனா்.
இந்திய விமான பாதுகாப்பு சட்ட விதிமுறைகளின் படி, விமானத்தில் ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதால், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஜிபிஎஸ் கருவியை பறிமுதல் செய்னா்.
விசாரணையில் கப்பல் நிறுவனம் ஒன்றில் மென் பொறியாளராகப் பணியாற்றி வரும் அவா் பிப். 2-ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து சுற்றுலா விசாவில் துபை வழியாக சென்னை வந்துள்ளாா். மாமல்லபுரம், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றுவிட்டு, கோலாலம்பூா் வழியாக அமெரிக்கா செல்வதற்காக அவா் வந்திருப்பதும் தெரியவந்தது.
மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விமானத்தில் ஜிபிஎஸ் கருவியை எடுத்துச்செல்ல அனுமதி உண்டு என்பதால், ஜிபிஎஸ் கருவியை இந்தியா கொண்டு வந்ததாக அப்பெண் தெரிவித்தாா்.
இருப்பினும் அப்பெண்ணின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்க பெண் பயணியின் பயணத்தையும் ரத்து செய்து சென்னை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து போலீஸாா் அவரிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.