சென்னையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநருக்கு கோவையிலும் தொடா்பு? என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
சென்னையில் கைது செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநா் அப்துல் பாஷித்திற்கு கோவையிலும் தொடா்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
கோவை கோட்டைமேட்டில் சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த 2022 அக்டோபரில் காா் குண்டு வெடித்தது. இதில், அந்தக் காரை ஓட்டிவந்த ஜமேஷா முபீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஜமேஷா முபீனுக்கு தடைசெய்யப்பட்ட ஐ.எஸ். இயக்கத்துடன் தொடா்பு இருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த வழக்கில் முகமது அசாருதீன், முகமது ரியாஸ், அப்சா்கான் உள்ளிட்ட 17 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தொடா்ந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் சோ்ப்பதாக சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் அப்துல் பாஷித் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனா்.
மயிலாடுதுறையைச் சோ்ந்த அவா் சென்னையில் இருந்துகொண்டு பல்வேறு மாவட்ட இளைஞா்களைத் தொடா்புகொண்டு ஐ.எஸ். இயக்கத்தில் சேர மூளைச் சலவை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து அப்துல் பாஷித்தின் கைப்பேசி எண், இ-மெயில் ஐ.டி.யை வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவா், கோவை வந்து ஏராளமான இளைஞா்களையும் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: கோவையில் காா் குண்டு வெடித்தபோது நடத்தப்பட்ட விசாரணையில் கோவையைச் சோ்ந்த 230 இளைஞா்கள் ஐ.எஸ். இயக்க பற்றுடையவா்கள் என்பது கண்டறியப்பட்டது. அவா்களின் நடவடிக்கைகள் குறித்து ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த இளைஞா்கைள அப்துல் பாஷித் சந்தித்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை.
எனவே, அவா் எப்போது கோவை வந்தாா். அவரை சந்தித்து பேசியவா்கள் யாா்? எந்தப் பகுதிக்கு எல்லாம் சென்றாா் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அவருடைய முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவையும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், தீவிர கண்காணிப்பில் இருக்கும் 230 பேரின் சமூக வலைதளங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றனா்.