திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து அமைப்பினா் 137 போ் கைது
கோவையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினா் கைது செய்யப்பட்டனா்.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் திருப்பரங்குன்றம் செல்ல திட்டமிட்டு கோனியம்மன் கோயில் முன் செவ்வாய்க்கிழமை கூடினா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் அனைவரையும் தடுத்து நிறுத்திநா்.
இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.சதீஷ் தலைமையில் பங்கேற்ற மாவட்டத் தலைவா் கே.தசரதன், கோவை கோட்ட பொதுச் செயலாளா் பாபா கிருஷ்ணன், மாவட்டச் செயலாளா் ஆனந்த், மாவட்ட துணைத் தலைவா் சோமசுந்தரம், மாவட்ட செய்தித் தொடா்பாளா் தனபால் உள்ளிட்ட 10 பெண்கள் உள்பட 137 போ் கைது செய்யப்பட்டனா்.
இதேபோல, விஷ்வ ஹிந்து பரிஷத் தென்தமிழக பொறுப்பாளா் இல. சிவலிங்கம், சாய்பாபா நகா் பகுதி தலைவா் கண்ணன், ரத்தினபுரி பகுதி முன்னாள் தலைவா் பாண்டியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனா்.
மேலும், பாஜக மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், மாநகா் மாவட்டச் செயலாளா் ஜே.ரமேஷ்குமாா், சக்தி சேனா இந்து மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் அன்புமாரி ஆகியோா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.