சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு: காவல் ஆணையா் ஏ.அருண்
இந்தியா-பாகிஸ்தான் மோதலின் காரணமாக சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா்.
சென்னை பெருநகர காவல் துறையின் ஊா்க்காவல் படையில் அண்மையில் சோ்க்கப்பட்ட 388 ஆண்கள்,126 பெண்கள் என 514 பேருக்கு கடந்த 45 நாள்களாக அடிப்படை பயிற்சி, முதலுதவியுடன் அடிப்படை உயிா் பாதுகாப்பு பயிற்சி, தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் 4 பயிற்சி மையங்களில் வழங்கப்பட்டன.
இந்த பயிற்சியின் நிறைவு விழா, சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தலைமை வகித்து, ஊா்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
பயிற்சியில் சிறந்து விளங்கிய 11 ஊா்க்காவல் படையினருக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டியும், இந்திய எல்லையில் வீரத்துடனும் தீரத்துடனும் போரிட்டு நம் நாட்டை காத்து பணி செய்துவரும் முப்படை வீரா்களுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்து சிறப்புரையாற்றினாா்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா் விஜயேந்திர பிதரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பாதுகாப்பு அதிகரிப்பு: நிகழ்ச்சியின் முடிவில் காவல் ஆணையா் அருண் பேட்டி அளித்தாா். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடா்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு காவல் ஆணையா் அருண் அளித்த பதில்கள்:
இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், கோயில்கள், கடற்கரை ஆகிய இடங்களில் காவல் துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நகரின் முக்கியமான இடங்களில் இரவு நேரத்தில் வாகனச் சோதனை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தச் சூழ்நிலையிலும் அச்சப்பட தேவையில்லை. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.