செய்திகள் :

செயற்கை கருத்தரிப்பு: `சூப்பர் ஓவுலேஷன் சிகிச்சை' என்றால் என்ன?; யாருக்கு தேவைப்படும்?

post image

"சூப்பர்..!"

இந்த ஒற்றை வார்த்தை தான் எத்தனை அர்த்தங்களை, எத்தனை நம்பிக்கைகளை எவ்வளவு நிறைவை, எவ்வளவு மனமகிழ்வைத் தருகிறது.! இதே வார்த்தையை, அதிக அர்த்தம் நிறைந்த, அத்துடன் நம்பிக்கையையும் மனநிறைவையும் அளிக்கும் குழந்தைப்பேற்றிலும் கருத்தரிப்பு சிகிச்சையின்போது பயன்படுத்துகின்றனர் மருத்துவர்கள்.

ஆம்.! குழந்தைப்பேறின்மையில் மேற்கொள்ளப்படும் ஐ.யூ.ஐ, ஐ.வி.எஃப், இக்ஸி போன்ற செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளின் முதல்படியே 'சூப்பர் ஓவுலேஷன்'.. குறிப்பாக (Controlled Ovarian Hyperstimulation - COH) எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல் தான் என்கின்றனர் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர்கள். 

செயற்கை கருத்தரிப்பு

சூப்பர் ஓவுலேஷன்

அது என்ன 'சூப்பர் ஓவுலேஷன்'... அது, ஏன், எதற்கு, எப்படி, யாருக்கு மேற்கொள்ளப்படுகிறது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.!

பெண்ணின் இரு சினைப்பைகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான சினைமுட்டைகளில் ஏதேனும் ஒருபக்க சினைப்பையிலிருந்து ஒரு சினைமுட்டை மட்டும் ஒவ்வொரு மாதமும் வளர்ந்து, முதிர்வடைந்து வெளியேறி இனப்பெருக்கத்திற்கு அப்பெண்ணை தயார்படுத்துவதுதான் இயல்பு.

பிறந்தது முதல் ஒரு பெண்ணின் இரு சினைப்பைகளிலும் மில்லியன்கள் கணக்கில் உயிரணுக்களான சினைமுட்டைகள் கையிருப்பில் இருந்தாலும், reproductive age எனும் இனப்பெருக்க வாழ்நாள் முழுவதும் மொத்தம் 400 சினைமுட்டைகள் மட்டுமே வளர்ந்து, முதிர்வடைந்து அண்டவிடுப்பாகி கருத்தரிப்புக்குத் தயாராகின்றன என்பது இயற்கை நியதி.

கட்டுரையாளர்: மருத்துவர் சசித்ரா தாமோதரன்

இதில், ஒவ்வொரு மாதமும் மூளையின் ஹைபோதலாமஸ் பகுதியிலிருந்து சுரக்கும் GnRH ஹார்மோன்கள், பிட்யூட்டரி சுரப்பியின் FSH மற்றும் LH ஹார்மோன்களைத் தூண்டி, அவை முறையே சினைப்பையின் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரான் ஹார்மோன்களை சுரக்கச்செய்து, கருமுட்டை வளர்ச்சி, முட்டை முதிர்வாக்கம், அண்டவிடுப்பு எனும் அடுத்தடுத்த நிகழ்வுகளுடன் இறுதியில் கருத்தரிப்பு அல்லது மாதவிடாய் உதிரப்போக்காக சுழற்சியை முறைமைப் படுத்துகின்றன.

என்றாலும், ஒரே சுழற்சியின்போது ஒன்றுக்கு மேலான கருமுட்டைகள் அண்டவிடுப்பாவதும், சமயங்களில் கருமுட்டைகள் முற்றிலும் வளராமலோ அல்லது வளர்ந்தபின் வெளியேறாமலோ இருப்பதும் இயல்பாக நிகழக்கூடும்.

யாருக்கு இந்தச் சிகிச்சை?

பொதுவாக, இந்தக் கருமுட்டை வளராமல் அல்லது வெளியேறாமல் இருக்கும் நிலைகளில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை தான், ஓவுலேஷன் இண்டக்‌ஷன் (Ovulation Induction Drugs) எனும் சினைப்பைத் தூண்டல் மருந்துகள் என அழைக்கின்றனர் மருத்துவர்கள்.

இவற்றுள்  உட்கொள்ளப்படும் மாத்திரைகளான Clomiphene citrate அல்லது Letrozole, மற்றும் போடப்படும் ஊசியான Low dose Gonadotropins ஆகிய ஓவுலேஷன் இண்டக்‌ஷன் மருந்துகள் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு சினைமுட்டைகளை மட்டுமே தூண்டும் என்பதால் பிசிஓடி, உடல் பருமன் போன்ற நிலைகளிலும், ஆரம்பகட்ட குழந்தைப்பேறின்மை சிகிச்சையிலும் இவை பெரிதும் பயனளிக்கின்றன.

ஆனால், செயற்கை கருத்தரிப்பின் ஐவிஎஃப், இக்ஸி போன்ற சிறப்புச் சிகிச்சைகளில், குறைந்தது எட்டு முதல் பத்து வரையிலான தரமான, முதிர்வடைந்த கருமுட்டைகள் ஒரே மாதவிடாய் சுழற்சியில் கிடைப்பது அவசியம் என்பதால், இதில் பிரத்யேக ஊசி மருந்துகள் சற்று கூடுதல் டோஸேஜில் வழங்கப்படுவதுடன், ஸ்கேனிங் மூலமாக அவற்றின் எண்ணிக்கையும் வளர்ச்சியும் கண்காணிக்கப்பட்டு, தக்க சமயத்தில் அண்டவிடுப்பு தூண்டப்பட்டு, செயற்கை கருத்தரிப்பின் அடுத்த கட்டத்திற்காக அவை சேகரிக்கப்படுகின்றன.

இந்தப் பிரத்யேக சினைமுட்டைத் தூண்டலைத் தான் 'சூப்பர் ஓவுலேஷன்' என அழைக்கின்றனர் மருத்துவர்கள்.   சூப்பர் ஓவுலேஷன் சரி.. அதிலேயே என்ன COH எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

செயற்கை கருத்தரிப்பு

கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல்

பொதுவாக, ஐ.வி.எஃப் மற்றும் இக்ஸி சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் இந்த சினைமுட்டைத் தூண்டல் மருந்துகள், மூளையின் ஹைபோ-தலாமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் GnRH, FSH, LH சார்ந்த தயாரிப்புகளே என்பதுடன், அவற்றின் செயல்பாடுகளும் பொதுவாக, இயற்கை நிகழ்வைப் பிரதிபலிக்கும் வகையில்தான், ஆனால், சற்று கூடுதலாகச் செயல்படுகின்றன. என்றாலும், பெண்ணின் அதிகரிக்கும் வயது, அதிக உடல் எடை, பிசிஓடி சினைப்பை நீர்க்கட்டிகள், தைராய்டு பாதிப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்கள், முந்தைய அறுவை சிகிச்சை அல்லது நோய்த்தொற்று ஆகியன, சினைமுட்டை தூண்டலை பெருமளவு பாதிக்கக் கூடும் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். 

மருந்துகள் பலனளிக்காத நிலையில்...

பொதுவாக, சினைமுட்டைத் தூண்டல் மருந்துகள் முற்றிலும் பயனளிக்காத பெண்ணை Poor responder எனவும், தேவைப்படும் சினைமுட்டைகள் கிடைக்கப்பெறும் பெண்ணை Normal responder எனவும், மிக அதிகமான சினைமுட்டைகள் உருவாக்கிடும் பெண்ணை Hyper responder எனவும் மருத்துவர்கள் வகைப்படுத்துவார்கள்.

இதில் முதலாவது நிலை என்பது, மனதளவில் செயற்கை கருத்தரிப்புக்குத் தயாரான ஒரு பெண்ணுக்கு, அதற்கான தூண்டல் மருந்துகள் வழங்கப்பட்ட பின்னர், முட்டைகள் கைகூடாததால், சிகிச்சையைக் கைவிடும் நிலை என்றால், மூன்றாவது நிலையில் மிக அதிகப்படியான சினைமுட்டைகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளால் சிகிச்சையைக் கைவிடும் நிலை என்பது நமக்கு விளங்குகிறது.

இந்த முதலாவது மற்றும் மூன்றாவது நிலைகள் நிகழாமல், நார்மல் ரெஸ்பாண்டராக இருக்கப் பரிந்துரைக்கப்படுவதுதான், Controlled Ovarian Stimulation (COH) எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல் சிகிச்சை.

செயற்கை கருத்தரிப்பு

இதில், கருத்தரிப்பு சிகிச்சை தொடங்கப்பட உள்ள பெண்ணில், மாதவிடாய் சுழற்சி ஏற்பட்ட இரண்டு அல்லது மூன்று நாள்களில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மூலமாக சினைப்பை நுண்ணறைகளில் உள்ள முதிர்வடையாத கருமுட்டைகளின் எண்ணிக்கை (antral follicular count) கணக்கில் கொள்ளப்படுவதுடன், ஒவேரியன் ரிசர்வ் எனும் சினைப்பை இருப்பைக் குறிக்கும் ஏ.எம்.ஹெச் அளவுகளும் (AMH) பரிசோதிக்கப்படுகின்றன.

அத்துடன், முந்தைய சினைமுட்டை தூண்டலின்போது ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது குறைகள் குறித்த தகவல்களும் பெறப்படுகின்றன.

அதற்குப்பின், மேற்சொன்ன GnRH, FSH, LH சார்ந்த தயாரிப்புகள், குறிப்பாக மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்ணின் சிறுநீரிலிருந்து பெறப்படும் Human Menopausal Gonadotropin (HMG) அல்லது மீள்சேர்க்கை நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட Recombinant FSH போன்ற சிறப்பு ஊசிமருந்துகள், கூடுதல் அளவில் தினமும் வழங்கப்பட்டு, ஃபாலிக்குலர் ஸ்கேனிங் மூலமாக, கருமுட்டை வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

இருபக்க சினைப்பையில் போதுமான ஃபாலிக்கிள்களும், அவற்றின் போதுமான வளர்ச்சியும் (20mm) கிட்டியபின்,  அண்டவிடுப்பைத் தூண்டும் ஹெச்சிஜி (HCG Human Chorionic Gonadotropin) ஊசிமருந்து வழங்கப்பட்டு, அதற்குப்பின் இந்தக் கருமுட்டைகள்  சிறிய அறுவை சிகிச்சை வாயிலாக சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் கருத்தரிப்புக்குத் தயார்செய்யப்படுகின்றன.

ஆக..

குழந்தைப்பேறின்மையில், "எல்லாம் சூப்பர்டா.." என அந்தப் பெண்ணை தட்டிக்கொடுப்பதற்கு பெரிதும் உதவுகிறது இந்த சூப்பர் ஓவுலேஷன் மற்றும் Controlled Ovarian Hyperstimulation எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல் என்பதே உண்மை..!

ஆனால். சூப்பர் கூட சில சிக்கல்களைத் தரக்கூடுமாம். அதுகுறித்தான தகவல்களுடன் பூப்பு முதல் மூப்பு வரை பயணம் தொடர்கிறது.

Doctor Vikatan: கருத்தரிப்பதை தவிர்க்க பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாமா?

Doctor Vikatan: பீரியட்ஸ் நாள்களில்தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் கருத்தரிக்காது என்கிறாள் என் தோழி. வெளிநாட்டில் வசிக்கிறஅவள், கருத்தரிப்பதைத் தவிர்க்க, அங்கெல்லாம் இந்த முறையைப் பின்பற்றுவதாகச்சொல்கிற... மேலும் பார்க்க

Doctor Vikatan: சிசேரியனுக்குப் பிறகு மலச்சிக்கல், வாயு பிரச்னை.. காரணமும், தீர்வும் என்ன?

Doctor Vikatan: என் தங்கைக்கு கடந்த சில நாள்களுக்குமுன்புதான் சிசேரியன் அறுவை சிகிச்சையில் குழந்தை பிறந்தது. அதிலிருந்து அவளுக்கு மலச்சிக்கல் பிரச்னையும், அதிகப்படியான வாயு வெளியேறும் பிரச்னையும்ஆரம்ப... மேலும் பார்க்க

Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய்லாந்து மாணவி சாதனை

இந்தியாவில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற 72-வது உலக அழகிப் (Miss World) போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri) வெற... மேலும் பார்க்க

Doctor Vikatan: பீரியட்ஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பப்பையை அகற்றுவதுதான் நிரந்தரமான தீர்வா?

Doctor Vikatan: எனக்கு 38 வயதாகிறது. கடந்த சில வருடங்களாக பீரியட்ஸின்போதுஅதிகமாக ப்ளீடிங் ஆகிறது. இதனால்எனக்கு ரத்தச்சோகையும் வந்துவிட்டது. மருத்துவரை அணுகினால், குழந்தை பெற்றுவிட்டதால், இனி கர்ப்பப்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: குடும்ப பின்னணியில் நீரிழிவு இல்லாதபோதும், கர்ப்ப காலத்தில் டயாபட்டீஸ் வருவது ஏன்?

Doctor Vikatan: என் வயது 32. எங்கள் குடும்பத்தில் பிறந்த வீட்டுப் பக்கமும் சரி, புகுந்த வீட்டுப் பக்கமும் சரி, யாருக்கும் டயாபட்டீஸ் இல்லை. ஆனால், நான் கர்ப்பமாக இருந்தபோது எனக்கு டயாபட்டீஸ் வந்தது. அ... மேலும் பார்க்க