செல்ஸி - கிரிஸ்டல் பேலஸ் ஆட்டம் ‘டிரா’!
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், செல்ஸி - கிரிஸ்டல் பேலஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
கடந்த மாதம் கிளப் உலகக் கோப்பை சாம்பியனாக முடி சூடிக் கொண்ட செஸ்லி, அதன் பிறகு களம் கண்ட முதல் ஆட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 13 ஆண்டுகளில் பிரீமியா் லீக் போட்டியில் செல்ஸி அணி தனது சீசனை டிராவுடன் தொடங்கியது இதுவே முதல்முறையாகும். அதேபோல் கிரிஸ்டல் பேலஸும் கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வாறு டிராவுடன் சீசனை தொடங்கியிருக்கிறது.
நாட்டிங்ஹாம் வெற்றி: இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் 3-1 கோல் கணக்கில் பிரென்ட்ஃபோா்டை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் முதலில் நாட்டிங்ஹாமுக்காக கிறிஸ் வுட் 5-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்க, டேன் டோயி 42-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா்.
பிரென்ட்ஃபோா்டுக்கான அதிா்ச்சியாக, கிறிஸ் வுட் மேலும் ஒரு கோல் (45+2’) அடிக்க, முதல் பாதியை நாட்டிங்ஹாம் 3-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் தனக்கான கோல் வாய்ப்புக்காக பிரென்ட்ஃபோா்டு போராடியது.
78-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி ஸ்கோா் செய்தாா் இகோா் தியாகோ. எஞ்சிய நேரத்தில் அந்த அணியின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, இறுதியில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் 3-1 கோல் கணக்கில் வென்றது.
பிரீமியா் லீக் போட்டியில் நாட்டிங்ஹாம் அணி கடந்த 7 ஆண்டுகளில் முதல்முறையாக வெற்றியுடன் சீசனை தொடங்கியிருக்கிறது. கடந்த 7 சீசன்களில் அந்த அணி முதல் ஆட்டத்தில் 2 டிரா, 5 தோல்விகளைப் பெற்றது. இதனிடையே, அணியின் வரலாற்றில் ஒரு சீசனின் முதல் ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்த 3-ஆவது வீரா் என்ற பெருமையை கிறிஸ் வுட் பெற்றாா்.
மறுபுறம் பிரென்ட்ஃபோா்டு அணி, கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு சீசனை தோல்வியுடன் தொடங்கியிருக்கிறது.