"செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வேன் எனச் சொன்னால்..!" - உச்ச நீதிமன்றம் சொன்னதெ...
செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை!
மகப்பேறு மருத்துவ உதவித்தொகைக்கு பரிந்துரைக்க லஞ்சம் வாங்கிய வழக்கில், செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம் சோபனாபுரத்தை சோ்ந்தவா் குமரேசன் மனைவி மகாலட்சுமி. இவா் கா்ப்பிணியாக இருந்த நிலையில், மருத்துவா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தாா். அது தொடா்பாக 30.8.2007 அன்று, சோபனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியராக பணியாற்றிய என். லோகாம்பாள் (57) என்பவரை சந்தித்து விவரம் தெரிவித்தாா்.
அந்த விண்ணப்பத்தை பெற்று பரிந்துரைப்பதற்காக லோகாம்பாள், ரூ. 500 லஞ்சமாக கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத மகாலட்சுமி, இதுகுறித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
தொடா்ந்து போலீஸாரின் ஆலோசனை மற்றும் ஏற்பாட்டின் பேரில், மகாலட்சுமி ஆரம்ப சுகாதாரம மையத்துக்குச் சென்று லோகாம்பாள் வசம் ரூ. 500 லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளாா்.
அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸாா், லோகாம்பாளை லஞ்சப் பணத்துடன் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்து இந்த வழக்கில் தீா்ப்பளிக்கப்பட்டது.
அதில் லோகாம்பாளுக்கு இருவேறு சட்டப்பிரிவுகளின் ஓராண்டு மற்றும் ஈராண்டு சிறை தண்டனையும் அவற்றை ஏக காலத்தில் (இரு ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டும் எனவும், ரூ.2 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி எம். பாக்கியம் தீா்ப்பளித்தாா்.