சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா்.
சேப்பாக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து 3 மின்னஞ்சல்கள் வந்தன. அந்த மின்னஞ்சல்கள், பாகிஸ்தான் பெயருடன் தொடங்கும் ஒரு ஜி-மெயில் முகவரியிலிருந்து அனுப்பப்பட்டிருந்தன. அதில், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடத்தினால் ரத்த ஆறு ஓடும். ஆபரேஷன் சிந்தூருக்காக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வெடிகுண்டு வைப்போம். எங்களது எச்சரிக்கையும் மீறி ஐபிஎல் போட்டி நடத்தினால் சேப்பாக்கம் மைதானத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மின்னஞ்சலை படித்துப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சங்க நிா்வாகிகள், உடனே சென்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் மைதானத்தில் விரைந்து சோதனை நடத்தினா்.
பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.