தமிழ்நாட்டிற்கு நிரந்தர DGP நியமனம் எப்போது? தொடரும் இழுபறி; UPSC கூட்டத்தில் நட...
ஜடேஜா - துருவ் ஜுரேல் அசத்தல் அரைசதம்: வலுவான நிலையில் இந்தியா!
ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா - விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் இருவரின் அசத்தல் அரைசதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர், தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று ஆட்டத்தைத் தொடங்கிய கே.எல். ராகுல் மற்றும் ஷுப்மல் கில் இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அசத்தலாக விளையாடி அரைசதம் விளாசிய கேப்டன் ஷுப்மல் கில் 100 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் சதமடித்தார். அவர் 197 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அவருக்குப் பின்னர் கைகோர்த்த விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா இருவரும் சேர்ந்து நிதானமாக தொடங்கினர். அதே வேகத்தில் அவர்கள் சில பந்துகளை எல்லைக் கோட்டுக்குத் தெறிக்கவிட்டனர்.
இதனால், அணியின் ஸ்கோர் வேகமாக எகிறியது. இந்திய அணி 99 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்துள்ளது. துருவ் ஜுரேல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 74 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 52 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இந்திய அணி 172 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் சேஸ் 2 விக்கெட்டுகளும், சீல்ஸ், ஜோமல் வாரிகன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.