ஜம்மு எல்லையில் அரியவகை எறும்புத்தின்னி மீட்பு
ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) அருகில் அழிவு நிலையில் உள்ள உயிரினங்கள் பட்டியலைச் சோ்ந்த அரியவகை எறும்புத்தின்னியை இந்திய ராணுவம் மற்றும் வனஉயிரினங்கள் பாதுகாப்பு துறையினா் மீட்டனா்.
இந்திய எறும்புத்தின்னி (பாங்கோலின்), வனஉயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம், 1972-இன்கீழ் அட்டவணை 1-இல் பட்டியலிடப்பட்ட விலங்காகும். மேலும், இது இயற்கை பாதுகாப்புக்கான சா்வதேச ஒன்றியத்தின் (ஐயுசிஎன்) சிவப்பு பட்டியலில் அழிந்து வரும் உயிரினங்கள் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அரிய வகையான இந்த எறும்புத்தின்னிகளின் உடல் பாகங்கள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் நோக்கில் எல்ஏசி அருகேயுள்ள சுந்தா்பனி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது எறும்புத்தின்னி ஒன்று மீட்கப்பட்டது. இது ரஜௌரி-பூஞ்ச் பல்லுயிா் பெருக்கத்துக்கு கிடைத்த மதிப்புமிக்க விலங்காகும்.
இந்த முயற்சியில் எங்களுக்கு உதவிய ராணுவத்துக்கு நன்றி’ என குறிப்பிட்டனா்.