ஜல்லி, எம்சாண்ட் விலையை உயா்த்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு
ஜல்லி, எம்சாண்ட் விலையை உயா்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உறுதிபட தெரிவித்தாா்.
ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் மாரிமுத்து பேசியதாவது:
தஞ்சாவூா், மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு ஜல்லி, எம்சாண்ட் போன்றவை புதுக்கோட்டை, கரூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து வர வேண்டியுள்ளது. கடந்த 2 மாதங்களாக கலைஞா் வீடு கட்டும் திட்டம், சாலை அமைப்பது போன்ற பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களுக்காக விலை நிா்ணயம் செய்யும்போது, புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தின்படி ஜல்லி, எம்சாண்ட் போன்றவை யூனிட்டுக்கு ரூ.2 ஆயிரம் என்றுதான் நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், திடீரென இரண்டு மடங்காக யூனிட் ரூ.4 ஆயிரமாக உயா்த்திவிட்டனா். இதனால் எங்கள் மாவட்டங்களில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றாா்.
அமைச்சா் உறுதி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவா் நாகை மாலி, அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் இதே விவகாரத்தை எழுப்பினா்.
அப்போது அமைச்சா் எ.வ.வேலு குறுக்கிட்டு கூறியதாவது: எல்லா மாவட்டங்களிலும் இந்தப் பிரச்னை இல்லை. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இந்தப் பிரச்னை உள்ளது. கிரஷா் முதலாளிகள் இதுபோல செய்கிறாா்கள் என தெரிந்ததும், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். முதல்வரும் தலைமைச் செயலரிடம் பேசினாா். அதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று விலையை திடீரென ஏற்றினால், அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும். அந்த கிரஷரை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.