சட்டப்பேரவைச் செயலரைச் சந்தித்த அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்! தினமும் ரூ. 85 கோடி இழப்பு!!
டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார் நிறுவனத்தின் மீது கடந்த ஆக. 31 ஆம் தேதி சைபர் தாக்குதல் நடைபெற்றது. இதனால் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு கார்கள் உற்பத்தி 4-வது வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டன், சீனா, ஸ்லோவாக்கியா, பிரேசில், இந்தியா என அனைத்து உற்பத்தி மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஊழியர்கள் யாரும் வேலைக்கு வர வேண்டாம் என நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் உள்ள 3 தொழிற்சாலைகளில் மட்டும் 30,000 ஊழியர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
இதனால் தினசரி ஆயிரக்கணக்கான கார்கள் உற்பத்தி தடைபட்டுள்ளது. இதனால் வாரத்துக்கு தோராயமாக ரூ. 600 கோடி(50 மில்லியன் பவுண்ட்) இழப்பு ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே நாள் ஒன்றுக்கு ரூ. 85 கோடி இழப்பு ஆகும்.
ஜாகுவார் உற்பத்தி மையங்கள் மட்டுமின்றி அதைச் சார்ந்து இருக்கும் பல நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜாகுவார் உற்பத்தி மையம் மூடப்படுவது வருகிற அக். 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சைபர் தாக்குதலால் முக்கிய தரவுகளை இழந்துள்ளதாகவும் அதனை மீட்டெடுக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதலில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிரிட்டன் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகளின் உதவியுடன் தொழில்நுட்பத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எனினும் ஜாகுவார் நிறுவனம் இதிலிருந்து மீண்டுவர சில மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பணியமர்த்தப்படுவார்களா? என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
பிரிட்டனில் இதற்கு முன்பாக சில நிறுவனங்களும் சைபர் தாக்குதலுக்கு ஆளாகி பல கோடி இழப்பைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
UK Jaguar Land Rover cyberattack shutdown to hit four weeks
இதையும் படிக்க | பெண்களே இரவில் தனித்துப் பயணிக்கிறீர்களா? இதை கண்டிப்பாகச் செய்யுங்கள்!