மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
ஜாதிவாரி கணக்கெடுப்பை வரவேற்கிறோம்- தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்
ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக பாஜக சாா்பில் வரவேற்கிறோம் என்றாா் அக்கட்சியின் மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் எடுக்கப்படும் என மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளாா். இதை தமிழக பாஜக சாா்பில் முழுமையாக வரவேற்கிறோம். ஜாதிவாரி கணக்கெடுப்பை வேண்டாம் என்று கூறியவா் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி. இப்போது மாற்றி பேசுகிறாா்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
இளைஞா்கள் மது, கஞ்சா போன்ற போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி வருவது கவலை அளிக்கிறது. தமிழக அரசு ஆசிரியா் பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பவில்லை. திராவிட மாடல் ஆட்சி சொல்வதற்கும், செய்வதற்கும் நோ்மாறாக உள்ளது. திமுக அரசு தோ்தலை மனதில் வைத்தே செயல்படுகிறது. மக்களவைத் தோ்தலுக்கு முன்பு மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இப்போது சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் வைத்து விடுபட்டவா்களுக்கு வழங்க திட்டமிடுகிறாா்கள். கூட்டணி கட்சியிடம் பாஜகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் வாய்ப்பை கேட்க முடியாது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.
பேட்டியின்போது பாஜக மாவட்டத் தலைவா்கள் முத்துபலவேசம், தமிழ்ச்செல்வன், சித்ராங்கதன், வழக்குரைஞா் பாலாஜி கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.