கமல் ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்
`டவுசர் கடை' சாப்பாடு: கோலா உருண்டை முதல் மட்டன் சுக்கா வரை; 81 வயதில் அசத்தும் ராஜேந்திரன் தாத்தா
சென்னை மந்தைவெளி டவுசர் கடை
ஒவ்வொரு நாகரிக சூழலுக்கு ஏற்றவாறு காலந்தோறும் உணவு முறையும் அதன் மீதான மோகமும் மக்களிடையே அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்.
ஆனால் 1977-ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு உணவகம் இன்றும் மக்களின் ஃபேவரிட் லிஸ்ட்டில் இருக்கிறதென்றால் ஆச்சரியம்தானே. அதே ஆச்சரியத்தோடு கிளம்பினோம்.
சென்னை மந்தைவெளி ஆர். கே. மடம் சாலையில் உணவகத்தைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் மாற்றம் பெற்றிருக்க அதே பழைமை மாறாமல் நம்மை வரவேற்கிறது காமாட்சி மெஸ் என்று பெயரிடப்பட்ட டவுசர் கடை.

டவுசர் அணிந்து வேலையில் மும்முரமாய் ஈடுபட்டுக்கொண்டிருந்த டவுசர் தாத்தா என்று சொல்லப்படும் ராஜேந்திரனிடம் உரையாடத் தொடங்கினோம்.
"விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவன். 13 வயதிலேயே ஊரை விட்டு திருச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்தேன். இப்போது 81 வயதாகிறது.
8 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். பிறகு திருமணம் நடைபெற்றது. ஒரு குழந்தை மூளை வளர்ச்சி இல்லாமல் பிறந்தது. அதற்கு வைத்தியம் பார்ப்பதற்காகத்தான் சென்னை வந்தோம். பிறகு அந்தக் குழந்தையும் இறந்துவிட்டது.
மனைவியும் 26 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் இறந்துவிட்டார். 1977-ல் சென்னைக்கு வந்தது முதல் இங்குதான் கடை தொடர்ந்து நடத்தி வருகிறேன்.
காமாட்சி மெஸ் என்ற பெயரிலேயே இந்த உணவகத்தைத் தொடங்கினோம். ஆனால் வரும் வாடிக்கையாளர்கள் எனது தோற்றத்தை வைத்து டவுசர் அப்பா, டவுசர் அண்ணாச்சி, தற்போது டவுசர் தாத்தா என்று அழைக்கத் தொடங்கி விட்டதால் அதுவே கடையின் பெயராகவே மாறிவிட்டது."
சிரிக்கிறார்...

சின்ன வயதில் சமையல் கலையின் மீது பெரிதும் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், இங்கு வந்த பிறகு எனது மாமனார் உதவியுடன் இந்த உணவகத்தை தொடங்கினேன். எனது மாமனார் திருச்சியில் மெஸ் நடத்தி வந்திருந்தார். அவர் அனுப்பிய ஆட்கள் உதவியுடன் கடையை நடத்தி வந்தேன். பிறகு அவர்களும் பிற காரணங்களுக்காக வெளியேற நானே முழுவதுமாக வேலை செய்ய தொடங்கிவிட்டேன்," என்கிறார்.
`கடை வைத்த போது சாப்பாடு ஒரு ரூபாய் 50 காசு'
இவ்வளவு காலமா பேமஸான கடையா வலம் வந்திட்டு இருக்கு. உங்க கடையோட ஸ்பெஷல் ஃபுட்ஸ் பத்தி சொல்லுங்க என்றதுக்கு,
"ஆரம்ப முதலே அசைவ உணவுகளைத்தான் இங்கு சமைத்து வருகிறோம். கடையில் சிறப்பு உணவு என்றால், இந்த கடையில் கோலா உருண்டை செய்து வருகிறோம். கிட்டத்தட்ட ஒரு 12, 15 ஆண்டுகளாக நாங்கள் இதை தயாரித்து வருகிறோம்.
மட்டன் சுக்கா, மீன், இறால் பெரும்பாலும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும்.
புரட்டாசி மாதம் என்பதாலும் மெட்ரோ பணிகள் 2 ஆண்டுகளாகவே நடைபெற்றுவதாலும் சற்று வியாபாரம் மந்த நிலையில் தான் இருக்கு.
போட்டியாளர் என்று நான் யாரையும் கருதுவதும் இல்லை. கடை வைத்த போது ஒரு ரூபாய் 50 காசு சாப்பாடு. இன்று 90 ரூபாய். அப்போது ஒரு மாதம் உணவு சாப்பிட்டாலே 90 ரூபாய் தான் காசு ஆனால் இன்று ஒரு வேளை உணவு 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காலம் மாற விலைவாசியும் உயர்ந்து வருகிறது. விலைப்பட்டியலையும் மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. இந்த கடையில் குளிர்சாதனப் பெட்டிகள் எதுவும் இல்லை.

விறகு அடுப்பு சமையல்
அன்றைய பொருட்களை அன்றே நாங்கள் சமைத்து விடுவோம். நாங்கள் மசாலா பொருட்களை கடையிலிருந்து எதுவும் வாங்குவதில்லை. நாங்களே அரைத்து நாங்களே அதை பயன்படுத்தி வருகிறோம்.
நிறைய பேர் சொல்லுவார்கள், "கேஸ் அடுப்பு மற்றும் மின்சார அடுப்புகள் என்று வந்துவிட்ட நிலையில் நாங்கள் விறகு அடுப்பை பயன்படுத்துவதை கேட்பார்கள்." விறகடுப்பில் சமைப்பதால் உடல் நலத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. நானும் பெரிதாக இதைத்தான் விரும்புகிறேன்.
` சமையல் கலை தான் பொழுதுபோக்கு'
ஜப்பான் சுற்றுலா பயணிகள் கூட இங்கு வந்து சாப்பிடுவதுண்டு. சினிமா நடிகர்கள், டைரக்டர்கள் மற்றும் பல பிரமுகர்களும் இங்கு வந்து சாப்பிட்ட கதையும் இருக்கிறது. பெரும்பாலும் தற்போது பார்சல் வாங்கிவிட்டு சென்று விடுகிறார்கள்.
எனது பொழுதுபோக்கு என்பதே இந்த சமையல் கலை தான். இரவில் கண்ணதாசன் பாடலை கேட்பது மிகவும் பிடிக்கும். திரைப்படம் என்றால் அது சிவாஜி கணேசன் படம் தான் பிடிக்கும். எனக்கு இந்த கடை தான் எல்லாம். கடைக்கு வருகிற எல்லா மக்களும் மன நிறைவோடு வந்து சாப்பிட்டு போறாங்க. அதுவே எனக்கு போதும் என மனம் நிறைகிறார் டவுசர் தாத்தா ராஜேந்திரன்.

`கோலா உருண்டை மிகவும் அருமை'
வண்ணாரப்பேட்டையிலிருந்து வந்திருந்த வாடிக்கையாளரிடம் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) நான் இந்தக் கடையைப் பற்றி கேட்கும்போது, "கடந்த மூன்று ஆண்டுகளாகவே நான் இந்தக் கடைக்கு உணவு சாப்பிட வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்தது மட்டன் சுக்கா மற்றும் மீன்.
ஹோட்டலில் சாப்பிட வேண்டுமென்றாலே நான் வண்ணாரப்பேட்டையில் இருந்து கிளம்பி இங்கு வந்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது." என்கிறார்.
மயிலாப்பூரைச் சேர்ந்த மற்றொரு வாடிக்கையாளரிடம் இந்தக் கடையைப் பற்றி கேட்டபோது, அவர் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளாகவே நான் அசைவம் என்றாலே இந்த உணவகத்திற்கு வந்து சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது.
இங்கு வழங்கப்படும் அனைத்து உணவுகளும் எனக்கு மிகவும் பிடித்தமானது. குறிப்பாக கோலா உருண்டை மிகவும் அருமையாக இங்கு இருக்கும்" என்கிறார் அந்த வாடிக்கையாளர்.