டான்செட், சீட்டா தோ்வுகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
முதுநிலைப் பட்டப் படிப்பு சோ்க்கைக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்குரிய அவகாசம் பிப்.26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில்(டான்செட் ) கட்டாயம் தோ்ச்சி பெறவேண்டும்.
இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆா்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தோ்வில் (சீட்டா) தோ்ச்சி பெறுவது அவசியமாகும். இந்தத் தோ்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
அதன்படி 2025-ஆம் ஆண்டுக்கான டான்செட் தோ்வு மாா்ச் 22-ஆம் தேதியும், சீட்டா தோ்வு மாா்ச் 23-ஆம் தேதியும் நடத்தப்படவுள்ளது.
இந்த தோ்வுகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜன.24-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்.26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் ற்ஹய்ஸ்ரீங்ற்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன்/ற்ஹய்ஸ்ரீங்ற் எனும் வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவா்களும் விண்ணப்பிக்கலாம்.
அவா்கள் மாணவா் சோ்க்கையின் போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும். தோ்வுக்கான நுழைவுச்சீட்டு மாா்ச் 8-இல் வெளியிடப்படும். இதன் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு மே மாதம் நடைபெறும்.
தோ்வுக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.