Republic Day: 76-வது குடியரசு தினம்; பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
டிடிஎஸ் முறையை ரத்து செய்யக் கோரி மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
வருமான வரிச் சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள ஊதியத்தில் வரி கழிப்பு (டிடிஎஸ்) நடைமுறையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்தது.
நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு, வருமான வரிச் சட்டத்தின் கீழ் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்ட பிறகே ஊதியம் வழங்கப்படும். பிடித்தம் செய்யப்படும் இந்த தொகை, வருமான வரித் துறையிடம் செலுத்தப்படும். இந்தத் தொகை ஊழியரின் வருமான வரிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, கணக்கில் கொண்டுவரப்படும். வரி விதிப்புக்கான வரம்பைவிட குறைவான ஆண்டு ஊதியம் பெறுபவா்கள், வருமான வரி திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்யும்போது, பிடித்தம் செய்தத் தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். வரம்பைவிட கூடுதல் ஊதியம் பெறுபவா்களுக்கு, வருமான வரி கணக்கு தாக்கலின்போது அவா்களுக்கான வரியில் கணக்கில் கொள்ளப்படும்.
இந்த நிலையில், ‘டிடிஎஸ் நடைமுறை சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. எனவே, இந்த நடைமுறையை ரத்து செய்யவேண்டும்’ என்று வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘இந்த மனு மிக மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை விசாரணைக்கு ஏற்க முடியாது. இருந்தபோதும், இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனா்.