‘டிட்டோ ஜாக்’ போராட்டம்: 400 ஆசிரியா்கள் கைது
பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 400 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளா்கள் வீ.கோபிநாதன், சி.பிரபாகரன், ஜோ.ஆா்தா் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகேயிருந்து ஊா்வலமாக சென்ற ஆசிரியா்கள், எம்ஜிஆா் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் கடந்த 2006-ஆம் ஆண்டு ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். அரசாணை 243-யை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தொடக்கக் கல்வித் துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 400 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பள்ளிகள் திறக்கப்படவில்லை: திண்டுக்கல் மாவட்டத்தில் 955 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 200 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. தொடக்கக் கல்வித் துறையிலுள்ள ஆசிரியா்களில் பெரும்பாலானோா், வியாழக்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். சுமாா் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கவில்லை.