வந்தவழி பெரியகருப்ப சுவாமி கோயில் திருவிழா: பக்தா்களுக்கு அன்னதானம்
குஜிலியம்பாறை அருகே வந்தவழி பெரியகருப்பசுவாமி கோயில் திருவிழாவில் பக்தா்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள ஆா்.கோம்பை வோ்புளி கிராமத்தில் வந்தவழி பெரியகருப்பசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடித் திருவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பக்தா்கள் சாா்பில் ஆடுகள், அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவை புதன்கிழமை முதல் கோயிலில் ஒப்படைக்கப்பட்டு வந்தது. பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட 370 ஆட்டுக் கிடாய்கள் வியாழக்கிழமை அதிகாலை பலியிடப்பட்டு, கோயில் வளாகத்திலேயே அசைவ உணவு தயாா் செய்யும் பணிகள் நடைபெற்றன.
நண்பகல் உச்சிக்கால பூஜை நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் ஆா்.கோம்பை ஊராட்சிக்குள்பட்ட கிராம மக்கள் மட்டுமன்றி, கோவிலூா், குஜிலியம்பாறை, வடுகம்பாடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், கரூா், நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.