Car: '35 ஆண்டுகள், 100 ஆடம்பர கார்கள்' - ரூ.8500 கோடி மதிப்புள்ள வீட்டை கார் மிய...
டிவி நடிகர் சங்க தேர்தல்: "'காசு வாங்கிட்டு வேலை செய்ற'னு ஒருமையில் பேசினாங்க" - உமாசங்கர் வேதனை
ஆகஸ்ட் 10ம் தேதி நடந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் தனக்கு நிறையக் கசப்பான அனுபவங்களைத் தந்ததாகவும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்ட நாள்களில் அமைதி இழந்து தூக்கம் தொலைந்ததாகவும் குமுறியுள்ளார், தேர்தலை நடத்திய பெப்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் உமாசங்கர் பாபு.
தேர்தலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பரத்துக்கு இது தொடர்பாக அவர் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில்,
‘தாங்களும் நிர்வாகியாக அங்கம் வகித்த செயற்குழுவின் ஒப்புதலுடனேயே நான் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். 39 வருடங்களாக நேர்மையாக தொழிற்சங்கவாதியாக இருந்து பல சங்கங்களின் தேர்தல்களை நியாயமாக நடத்திக் கொடுத்த நான் அதே உறுதியுடன் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலையும் நடித்தி சான்றிதழ்களை வழங்கினேன்.

ஆனால் தேர்தல் முடிந்த பிறகு எனக்குத் தெரியவந்த சில விஷயங்கள் என்னை ரொம்பவே காயப்படுத்தியுள்ளன. என் நேர்மையைச் சந்தேகித்து என் மீது தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் தந்துள்ளனர் உங்கள் அணியைச் சேர்ந்த சிலர்.
‘காசு வாங்கிட்டுதானே வேலை செய்கிறாய்’ என என்னை ஒருமையில் பேசினர். தேர்தலை நடத்தும் அதிகாரிக்கு ரெமுனரேஷன் தருவது எல்லா சங்கங்களிலும் காலம்காலமாக இருந்து வருகிற நடைமுறைதான் என்பது உங்களுக்குத் தெரியாதா?

என் அறையில் நான் இருந்த போது என் அனுமதி இல்லாமல் அதாவது எனக்குத் தெரியாமலேயே வீடியோ எடுத்திருக்கிறார்கள். நடிகர் பானுச்சந்தர் அதை சங்க மெயிலுக்கு அனுப்பி விட்டு உடனே டெலீட் செய்கிறார். உறுப்பினர் சங்கீதா பாலன் என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார்.
என்ன மாதிரியான நடவடிக்கைகள் இவையெல்லாம்?' எனத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உமாசங்கர் குற்றம் சாட்டியுள்ள உறுப்பினர்கள் அனைவரும் வெற்றி பெற்ற பரத் அணியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த விவகாரம் சின்னத்திரை உறுப்பினர்களிடையே ஒருவித சலசலப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...