தஞ்சாவூா் மாவட்டத்தில் மே தின விழா
தஞ்சாவூா் மாவட்டத்தில் தொழிற் சங்கங்கள் சாா்பில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் கீழ வீதி ஏஐடியுசி தொழிற் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டப் பொருளாளா் தி. கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் துரை. மதிவாணன், ஆா்.பி. முத்துக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியை மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, வங்கி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. அன்பழகன் ஏஐடியுசி மே தின கொடியை ஏற்றி வைத்தனா். ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கரந்தை புகா், ஜெபமாலைபுரம் தஞ்சாவூா் நகா் கிளை, காவேரி சிறப்பங்காடி, சுமை தூக்கும் தொழிலாளா் சங்கம், காமராஜா் சந்தை தொழிலாளா் சங்கம், கீழ வாசல், சத்யா நகா் கட்டுமான சங்கம், கொடிமரத்து மூலை தொழிலாளா் சங்கம், அம்மா மாலை நேர காய்கறி அங்காடி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம், டாஸ்மாக் மாவட்ட மண்டல அலுவலகம், ஏஐடியுசி அனைத்து ஆட்டோ சங்கங்கள் ஆகிய இடங்களில் மே தின கொடியேற்றப்பட்டது.
இதில், மனித உழைப்பை சுரண்டும், நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் காா்ப்பரேட் பாசிச சக்திகளை முறியடிப்போம். பொதுத் துறைகளைப் பாதுகாப்போம். அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்போம் என உறுதி ஏற்கப்பட்டது.
டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலா் கோடீஸ்வரன், போக்குவரத்து சங்கச் செயலா் தாமரைச்செல்வன், கட்டுமான சங்கச் செயலா் செல்வராஜ், ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் செந்தில்நாதன், பாலகிருஷ்ணன், மலைச்சாமி, ஓய்வு பெற்றவா் சங்கப் பொதுச் செயலா் அப்பாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.