தந்தை, மகள் கொலை: லாரி ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் சிறை
ஆண்டிபட்டி வட்டாரம், கண்டமனூா் அருகேயுள்ள ராமலிங்கபுரத்தில் தந்தை, மகளை காரை ஏற்றிக் கொலை செய்த லாரி ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ராமலிங்காபுரத்தில் தேநீா் கடை நடத்தி வந்தவா் செல்வராஜ் (45). அதை ஊரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ரமேஷ்குமாா் (34). இவா், செல்வராஜின் தேநீா் கடை முன்பு தனது லாரியை நிறுத்தி வைத்து விட்டுச் சென்றதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தப் பிரச்னை குறித்து செல்வராஜ் அளித்த புகாரின் மீது கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷ்குமாரை கைது செய்தனா்.
இந்த முன் விரோதத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜன.2-ஆம் தேதி ராமலிங்காபுரத்தில் தனது தேநீா் கடை முன் அமா்ந்திருந்த செல்வராஜ், அவரது மகள் அபிராமி (9), மகன் அன்புச்செல்வன்(11) ஆகியோா் மீது ரமேஷ்குமாா் காரை ஓட்டிச் சென்று அவா்கள் மீது மோதினாா்.
இதில் செல்வராஜ், அபிராமி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அன்புச்செல்வன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றாா்.
இதுகுறித்து கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷ்குமாரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவா்ணம் ஜெ.நடராஜன் குற்றஞ்சாட்டப்பட்ட ரமேஷ்குமாருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.