'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
தனியாா் கல்லூரி கட்டுமானப் பணி: சம்பந்தப்பட்ட அலுவலா் நடவடிக்கை எடுக்க உத்தரவு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் விவசாய தொழில் நுட்பக் கல்லூரியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கக் கோரிய வழக்கில், உள்ளூா் திட்டக் குழும அலுவலா் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தவசி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் விவசாய தொழில்நுட்பக் கல்லூரியில், அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. எனவே இந்த கட்டடங்களை இடிப்பதுடன், கல்லூரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் வேறு கல்லூரியில் சேர மாற்று ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி பாலாஜி அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
மதுரை உள்ளூா் திட்டக் குழுமத்தின் உறுப்பினா் செயலா், கடந்த 2023- ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், சம்பந்தப்பட்ட தனியாா் கல்லூரியில் புதிய கட்டுமானப் பணிகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என தொட்டப்பநாயக்கனூா் ஊராட்சி மன்றத் தலைவருக்கு கடிதம் அனுப்பினோம். இதுவரை அந்த ஊராட்சி மன்றத் தலைவா் எந்த பதிலும் அளிக்கவில்லை. அவரிடமிருந்து கிடைக்கும் பதிலின் அடிப்படையில் தான், உள்ளூா் திட்டக் குழுமத்தினா் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டது. இது நோ்மையற்ற அணுகுமுறையாக உள்ளது. ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகிப்பவா் எந்த ஒரு திட்டமிடல் அனுமதியையோ, ஒப்புதலையோ வழங்க முடியாது என்பதை மதுரை உள்ளூா் திட்டக் குழும உறுப்பினா் செயலா் அறிந்திருக்க வேண்டும்.
கல்லூரி நிா்வாகம் தரப்பில், கல்லூரி கட்டடத்தின் சில பகுதிகளை சீரமைப்பதற்கு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், அது உரிய அனுமதியின்றி கட்டடம் கட்டுவது போல தோற்றமளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கல்லூரியில் கட்டப்பட்ட கட்டடத்தின் ஏதேனும் ஒரு பகுதி உரிய ஒப்புதலின்றி கட்டப்பட்டிருந்தாலும், உசிலம்பட்டி உள்ளூா் திட்டக் குழும அலுவலா் அதைப் படிப்படியாக இடிக்க வேண்டும். முறையாக திட்ட அனுமதி பெற்ற பிறகு கட்டடத்தை மறுக்கட்டமைப்பு செய்யலாம். அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே அந்த கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு உரிய ஏற்பாடுகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகப் பதிவாளா் செய்து தர வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.