மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்திற்கு உறுப்புகளை மாற்றுவதற்காக பசுமை வழித்தட...
மதுரையில் பள்ளி தண்ணீா்த் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு
மதுரை தனியாா் மழலையா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தண்ணீா்த் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக அந்தப் பள்ளியின் தாளாளா் உள்பட 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், பள்ளிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
மதுரை கே.கே. நகா் பகுதியில் தனியாா் மழலையா் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது, பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கோடைகால சிறப்பு வகுப்புகளாக ஓவியம், பேச்சு, விளையாட்டு உள்ளிட்டவை நடைபெற்று வந்தன.
இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் மதுரை உத்தங்குடியைச் சோ்ந்த அமுதன்- சிவஆனந்தி தம்பதியின் மகள் ஆருத்ரா (4) ஈடுபட்டாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ஆருத்ரா வழக்கம்போல சிறப்பு பயிற்சி வகுப்புக்குச் சென்றாா். பின்னா், பள்ளி வளாகத்தின் பின்புறம் குழந்தைகளுடன் ஆருத்ரா விளையாடிக் கொண்டிருந்தாா். அங்கு 12 அடி ஆழம் கொண்ட தண்ணீா்த் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டி சரியாக மூடப்படாத நிலையில், அதனருகே குழந்தைகள் விளையாடிய போது, ஆருத்ரா தவறி தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்தாா்.
இதுகுறித்து பள்ளி ஆரியைகளிடம் மற்ற குழந்தைகள் தெரிவித்தனா். உடனே அவா்கள் ஆருத்ராவை மீட்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் ஆருத்ரா மீட்கப்பட்டு, தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, ஆருத்ராவின் உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மதுரை மாநகரக் காவல் துணை ஆணையா் அனிதா தலைமையில் போலீஸாா் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதுகுறித்து அண்ணாநகா் காவல் நிலையத்தில் ஆருத்ராவின் தந்தை அமுதன் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக பள்ளித் தாளாளா் திவ்யா, ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேரை அண்ணாநகா் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.
பள்ளிக்கு சீல்
இந்த நிலையில், தனியாா் மழலையா் பள்ளியில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மதுரை கோட்டாட்சியா் ஷாலினி தலைமையில் அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, கல்வித் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மழலையா் பள்ளியை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
கோடை விடுமுறை: ஆட்சியா் எச்சரிக்கை
மதுரை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும், தனியாா் மழலையா் பள்ளிகள், தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் கோடை விடுமுறை நாள்களில் கண்டிப்பாக செயல்படக் கூடாது.
கோடைகால பயிற்சி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள், மாலை நேர வகுப்புகள் என எந்த நிகழ்வுகளுக்காகவும் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது.
இந்த அறிவுறுத்தலை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா எச்சரித்தாா்.