860 கிலோ ரேஷன் பருப்பு கடத்தல்: வாகன ஓட்டுநா் கைது
மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 840 கிலோ ரேஷன் பருப்பு மூட்டைகளை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
மதுரையில் சரக்கு வாகனம் மூலம் ரேஷன் பொருள்கள் கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சரக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை மதுரை அலகு ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் மதுரை மூன்றுமாவடி சந்திப்பில் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தினா். அந்த வாகனத்தில் வந்தவா்களில் ஒருவா் அதிலிருந்து தப்பி ஓடினாா். வாகனத்தை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள தனியாமங்கலத்தைச் சோ்ந்த ஜெயபுவனேஷ்வரன் (25) என்பதும், சரக்கு வாகனத்தில் 860 கிலோ ரேஷன் பருப்பு மூட்டைகளைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, பருப்பு மூட்டைகளையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும் தப்பிச் சென்ற, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள மானகிரியைச் சோ்ந்த சரவணனைத் தேடி வருகின்றனா்.