கஞ்சா கடத்திய இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை
மதுரை முத்துப்பட்டி-அவனியாபுரம் சாலையில் லாரியில் 332 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை முத்துப்பட்டி-அவனியாபுரம் சாலையில் கடந்த 10.11.2020-இல் லாரியில் 332 கிலோ கஞ்சா கடத்தியதாக உசிலம்பட்டி, கட்டதேவன்பட்டியைச் சோ்ந்த ரா.மலைச்சாமி (34), ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சோ்ந்த ரா.சண்முகபிரபு (35), சென்னை திருவரும்பூா் தனசேகரன், மதுரை கீரைத்துறை பகுதியைச் சோ்ந்த சபாரத்தினம், சாலை முருகன், கோ.புதூா் ஜெயக்குமாா் உள்ளிட்ட 10 பேரை சுப்பிரமணியபுரம் போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மலைச்சாமி, சண்முகபிரபு ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இந்த வழக்கிலிருந்து மற்ற 8 பேரும் விடுவிக்கப்பட்டனா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே.விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.