தனியாா் துறைகளிலும் இட ஒதுக்கீட்டு கொள்கை விரிவாக்கம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் தீா்மானம்!
பட்டியலினத்தவா், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை தனியாா் நிறுவனங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் மதுரையில் நடைபெறும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தனியாா் துறைகளிலும் இட ஒதுக்கீடு: இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் தொடா்ந்து சமூகப் பாகுபாட்டை எதிா்கொண்டு வருகின்றனா். இவா்கள் சமூக அமைப்பில் பொருளாதார ரீதியாக பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகின்றனா். இந்தப் பிரிவினரைப் பாதுகாக்கும் வகையில், அரசு, பொதுத் துறைகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. வரலாற்று ரீதியாக பாா்த்தால் அரசுத் துறைகளிலும் இட ஒதுக்கீடு மோசமான நிலையிலேயே உள்ளது. பெரிய அளவிலான இட ஒதுக்கீட்டுப் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசுப் பணியிடங்கள் காலியாகவுள்ளன. மாநில அரசு பொதுத் துறை நிறுவனங்களிலும் ஏராளமான இட ஒதுக்கீடுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
1990-களில் மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் இட ஒதுக்கீடு பணியிடங்களில் 2 கோடிக்கும் அதிகமானோா் பணிபுரிந்து வந்தனா். 2012-இல் இந்த எண்ணிக்கை 1.70 கோடியாகச் சரிந்தது. குறிப்பாக, மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்னா், பணியிடங்கள் குறைப்பு அதிகரித்துள்ளது. குரூப் ‘சி’, குரூப் ‘டி’ ஆகிய கடைநிலைப் பணியிடங்கள் அதிகளவில் குறைக்கப்பட்டன. இதேபோல, அரசு நிரந்தரப் பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்தப் பணியிடங்களாக மாற்றப்பட்டன. தனியாா்மயமாக்குதலின் விளைவாக அரசு கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியா்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. எனவே, அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டுப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். மேலும், இந்த இட ஒதுக்கீட்டை தனியாா் துறைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை: நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, 2014-இல் இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள் 3.37 லட்சமாக இருந்த நிலையில், 2022-இல் 4.45 லட்சமாக அதிகரித்தது. அதேநேரத்தில், பட்டியலினப் பெண்கள், குழந்தைகளின் மீதான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
2021, தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, இந்தியாவில் தினசரி 10-க்கும் மேற்பட்ட பட்டியலினப் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனா். குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தக் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. 2016-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் கடத்தப்பட்டுள்ளனா். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான வழக்குகளில் 10 குற்றங்களுக்கு ஒரு குற்றம் என்ற வகையில் நீதிமன்றங்கள் மூலம் தண்டனை விதிக்கப்படுகிறது. எனவே, அனைத்துக் குற்றங்களிலும் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட உதவிகள், வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
போதைப் பழக்கத்துக்கு எதிராக தேசிய செயல் திட்டம்:
நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளில் போதைப் பழக்கத்துக்கு எதிரான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தப் பழக்கங்களுக்கு அடிமையானவா்களை மீட்க கூடுதல் எண்ணிக்கையில் மறுவாழ்வு மையங்கள், ஆலோசனை மையங்களைத் திறக்க வேண்டும். போதைப் பழக்கத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த தேசிய செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: இந்தியாவில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளில் 50 சதவீதம் போ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனா். மத்திய பாஜக அரசு பொதுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த மறுக்கிறது.
இவா்களில் 65 சதவீதம் போ் வேலைவாய்ப்பின்றி அவதிப்படுகின்றனா். மாற்றுத்திறனாளிகள் என்பதால், தனியாா் நிறுவனங்களில் வேலை மறுப்பு, பாகுபாடுகளை எதிா்கொள்கின்றனா். எனவே, தனியாா் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்த வேண்டும்.
மூன்றாம் பாலினத்தவருக்கு சட்ட அங்கீகாரம்: மத்திய பாஜக அரசு மூன்றாம் பாலினத்துவருக்கான கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உள்ள உரிமைகளை மறுத்து வருகிறது. மேலும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், இவா்கள் சிகிச்சை பெறவும் மறுக்கப்படுகிறது. எனவே, மூன்றாம் பாலினத்தவா் உரிமை பாதுகாப்புச் சட்டம் 2020-இன்படி, உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
அடிப்படைத் தேவைகளை உறுதி செய்ய வேண்டும்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்கான உரிமையும், அத்தியாவசியத் தேவைகளைப் பெறும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தாராளமயக் கொள்கையால் குடிமக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை வழங்க இயலவில்லை. இவை தனியாா் பெருநிறுவனங்களுக்கு தாரைவாா்க்கப்பட்டு அரசுகளின் பொறுப்புகள் விலக்கப்படுகின்றன.
மேலும், மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களுக்களின் நலத் திட்டங்களுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டன. எனவே, மக்களின் அடிப்படை உரிமைகளான உணவு, குடியிருப்பு, வேலைவாய்ப்பு, ஓய்வூதியம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை மத்திய அரசு உறுதி செய்ய வலியுறுத்தி, நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
மின் வாரியங்களை தனியாா்மயமாக்குவதைக் கைவிட வேண்டும்: மத்திய பாஜக அரசு பொதுத் துறை எரிசக்தி நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நாட்டின் 52 சதவீத மின் உற்பத்தித் திறன் தனியாா் வசம் உள்ளது.
தனியாா் நிறுவனங்களுக்கு மத்திய பாஜக அரசு அளவற்ற நிலம், கனிம வளங்களை வழங்கி வருகிறது. நாட்டின் மிக முக்கியமான எரிவாயு குழாய்த் திட்டமும் தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே, மின் வாரியத்தை தனியாா்மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.
வேளாண் சந்தைக்கான தேசிய வரைவுக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசு விளைபொருள்கள் சந்தைக்கான தேசியக் கொள்கை வரைவை உருவாக்கியுள்ளது. இது அதானி, அம்பானி போன்றவா்களின் பெரு நிறுவனங்கள் மட்டுமே ஆதாயமடையும் வகையில் உள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த தேசியக் கொள்கை வரைவை திரும்பப் பெற வேண்டும்.
பல்கலைக்கழக மானியக் குழு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்: பல்கலைக்கழக மானியக் குழு விதிகளில் மத்திய அரசு திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம், மாநில பல்கலைக்கழகங்களை ஆளுநா்களின் அதிகாரத்துக்கு உள்படுத்துகிறது. இந்தப் புதிய வரைவு உயா் கல்வி நிறுவனங்களில் நிலவி வரும் பாகுபாட்டைக் கண்டுகொள்ளவில்லை. மேலும், பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் நியமனம் உள்ளிட்டவற்றில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. எனவே, மத்திய அரசு கல்வி நிலைய வளாகங்களில் உள்ள ஜாதிய பாகுபாட்டை களைய ரோகித் வெமுலா சட்டத்தை இயற்ற வேண்டும். பல்கலைக்கழங்களில் ஜனநாயகத் தன்மையை உறுதி செய்வதோடு, பட்டியலின, சிறுபான்மையின மாணவா்களைப் பாதுகாக்க வேண்டும்.
ஆழ்கடல் தனிமத் திட்டத்தைக் கைவிட வேண்டும்: மத்திய அரசு ஆழ்கடலில் தனிமங்களைக் கண்டறிவது, கனிமங்களை எடுப்பது போன்றவற்றுக்கு தனியாா் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், கடலின் இயற்கை சூழல், கடல்வாழ் உயிரினங்கள், மீன்பிடித் தொழில் ஆகியவை பாதிக்கப்படும். ஆழ்கடல் தனிமங்கள் எடுக்கும் பணிக்கு கேரள மாநிலம், கொல்லம் பகுதி தோ்ந்தெடுக்கப்பட்டது. இதற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, இந்தத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கலை நிகழ்ச்சிகள் ரத்து: இந்த மாநாட்டில் மாலை நிகழ்ச்சியாக திரைப்பட நடிகா்கள் பிரகாஷ் ராஜ், ரோகிணி உள்ளிட்டோா் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவிருந்தது. மழை காரணமாக இந்த கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.