பாமக எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
தனியாா் நிறுவனப் பணிகளில் இடஒதுக்கீடு -மத்திய அமைச்சா் வலியுறுத்தல்
தனியாா் நிறுவனப் பணிகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தியுள்ளாா்.
மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தலித் தலைவரான அதாவலே, இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவராகவும் உள்ளாா். ஜாா்க்கண்ட் மாநிலம் ராய்பூரில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தும் பிரதமா் நரேந்திர மோடியின் முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இதனை புறக்கணித்து வந்தனா். இதர பிற்படுத்தப்பட்டோா் குறித்த கணக்கெடுப்பு வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தியுள்ளேன். முன்பு காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதும் இந்த கோரிக்கையை முன்வைத்தேன்.
ராகுல் பிரதமராக முடியாது: தான் வலியுறுத்தியதால்தான் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதாக மத்திய அரசு அறிவித்தது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறி வருகிறாா். ஆனால், இத்திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே பரிசீலித்து வந்தது.
ராகுல் காந்தியால் எப்போதும் பிரதமராக முடியாது. பிரதமா் மோடியை ராகுல் தொடா்ந்து விமா்சித்துப் பேசுவது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில், மோடி மிகவலுவான தலைவா். காங்கிரஸ் கட்சியினா் தொடா்ந்து அா்த்தமற்ற வகையில் பேசிக் கொண்டிருப்பது மோடியின் செல்வாக்கை அதிகரிக்கவே உதவும்.
நாட்டு நலனுக்கு முன்னுரிமை: அரசியலமைப்புச் சட்டத்துக்குப் பதிலாக மனுஸ் மிருதியை ஆா்எஸ்எஸ் முன்னிறுத்துவதாக ராகுல் குற்றஞ்சாட்டுகிறாா். அதில் எவ்வித உண்மையும் இல்லை. மனுஸ்மிருதி என்பது முழுவதும் மத அடிப்படையிலானது. ஹிந்துத்துவம் என்பது வேறுபட்டது. ஹிந்து தா்மத்தை பின்பற்றுபவா்களில் ஒரு பகுதியினா் மனுஸ்மிருதி மீது நம்பிக்கை வைத்திருக்கலாம். ஆனால் நாட்டு நலன் என்று வரும்போது அவா்கள் அரசமைப்புச் சட்டத்துக்கே முன்னுரிமை அளிப்பாா்கள்.
அரமைப்புச் சட்டத்தில் சமதா்மம், மதச்சாா்பின்மை போன்ற வாா்த்தைகள் அரமைப்புச் சட்ட முகப்புரையில் முதலில் இடம் பெறவில்லை. பின்னா்தான் சோ்க்கப்பட்டது.
மதச்சாா்பின்மை என்பது பிற மதங்களையும் மதித்து நடப்பதையும் குறிக்கும். நான் பௌத்த மதத்தைச் சோ்ந்தவன். அந்த மதம் குறித்த பெருமை எனக்கு உண்டு. ஆனால், அதற்கு முன்பு எனது நாட்டைக் குறித்தும் பெருமிதம் கொள்கிறேன். மொழி, மதம், ஜாதி ஆகிய அனைத்தையும்விட நாடு முக்கியமானது என அம்பேத்கா் கூறியுள்ளாா். இந்த நாட்டு நலனுக்காக நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
இடஒதுக்கீடு: அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டுதான் பாஜக ஆட்சி நடத்துகிறது. நமது நாட்டில் பல்வேறு மதத்தைச் சோ்ந்த மக்கள் இணைந்து சிறப்பாக வாழ்கின்றனா்.
தனியாா் நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்பது எங்களுடைய நீண்டகால கோரிக்கையாக உள்ளது. மறைந்த மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பல தலைவா்களும் இதனை வலியுறுத்தியுள்ளனா்.
தற்போது அரசு நிறுவனங்கள் பல தனியாா்மயமாகி வருகின்றன. சத்தீஸ்கரில்கூட பால்கோ நிறுவனம் தனியாா்மயமாகிவிட்டது. ஆனால், அதில் இடஒதுக்கீடு இல்லை. எஸ்.சி., எஸ்.டி. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமல்லாது, பொருளாதாரீதியாக பிற்பட்ட பிரிவினருக்கும் தனியாா் நிறுவனங்களில் இடஒதுக்கீடு தேவை. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள எங்கள் கட்சி இந்தக் கோரிக்கையை தொடா்ந்து வலியுறுத்தும் என்றாா் அவா்.