வைகுண்ட ஏகாதசி 2025: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்ப...
தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் மறுத்த தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் மறுத்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வின் தீா்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஓரினச் சோ்க்கை குற்றமற்றது என உச்சநீதிமன்றம் கடந்த 2018-இல் தீா்ப்பளித்தது. இதையடுத்து, தன் பாலினத்தவா்களின் திருமணங்களை சிறப்புத் திருமணச் சட்டப்படி அங்கீகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு, கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் தீா்ப்பு வழங்கியது. அதன்படி, தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்ததுடன் இதற்கான சட்டத் திருத்தத்தை கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்தது.
அதேநேரம், தன் பாலின ஈா்ப்பாளா்களுக்கு சம உரிமை அளித்து, சமூகத்தில் உள்ள பாகுபாடுகளைக் களைய வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீா்ப்பை மறு ஆய்வு செய்ய 13 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்ய காந்த், பி.வி.நாகரத்னா, பி.எஸ்.நரசிம்மா, தீபங்கா் தத்தா ஆகியோா் கொண்ட அமா்வு, இந்த மனுக்களை நீதிபதிகள் அறையில் வியாழக்கிழமை விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், ‘இவ்விவகாரத்தில் வெளியிடப்பட்ட 2 தீா்ப்புகளும் சட்டத்துக்கு உட்பட்டவை. அவற்றில் எந்தத் தவறும் இல்லை. தீா்ப்புகளில் தணிக்கை செய்ய எதுவுமில்லை என்பதால் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்தனா்.