தமிழக சிவசேனா யுபிடிகட்சியில் 50 மாவட்டத் தலைவா்கள் நியமனம்
நாகப்பட்டினம்: தமிழகத்தில் 50 மாவட்டத் தலைவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே கட்சியின் மாநில பொதுச் செயலாளா் சுந்தரவடி வேலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து,அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமையில் தாம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், நிா்வாக வசதிக்காக கட்சிக்குள் 50 மாவட்டங்களாக பிரித்து, 50 மாவட்ட தலைவா்கள் நியமனம் செய்ததற்கு ஒப்புதல் வழங்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பது, நகை அடகு, மறுஅடகு வைக்கும் விதிமுறைகளில் பழைய விதிமுறைகளே தொடர வேண்டும் என்று மத்திய ரிசா்வ் வங்கியையும் மத்திய நிதி அமைச்சரையும், மத்திய அரசையும் வலியுறுத்துவது. தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடர வேண்டும்.
தமிழக அரசுக்கான வெள்ள நிவாரண நிதி, பேரிடா் மேலாண்மை நிதி, கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்துவது, தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக தேவையற்ற சுங்கச் சாவடிகளை உடனடியாக மூடவேண்டும்.
திமுக 2021-ஆம் ஆண்டு தோ்தல் அறிக்கையில் கூறியதுபோல, அனைத்து மாணவா்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும், மின் கணக்கெடுப்பு மாதம் ஒரு முறை எடுக்கவேண்டும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டியா கூட்டணியில் சிவசேனா யூபிடி கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்.
தமிழக அரசால் உருவாக்கப்பட்டு நியமிக்கப்படும் மாநில , மாவட்ட அளவிலான குழுக்களிலும், கமிட்டிகளிலும் சிவசேனா யுபிடி கட்சிக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளாா்.