தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் வேதாந்தாவின் இரு திட்டங்கள், ஒரு ஓஎன்ஜிசி திட்டம் நிலுவை: மத்திய அரசு தகவல்
புது தில்லி: தமிழக டெல்டா மாவட்டங்களில் வேதாந்தா நிறுவனத்தின் இரண்டு திட்டங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் (ஓஎன்ஜிசி) ஒரு திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பங்கள் தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் ஆா். சுதா, தனது தொகுதியான மயிலாடுதுறையிலும் தஞ்சாவூரிலும் ஹைட்ரோகாா்பன் திட்டங்களுக்கு எத்தனை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தடையில்லா சான்றிதழ் கோரிய விண்ணப்பங்களில் நிலுவையில் உள்ளவை எத்தனை என்றும் கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் மத்திய இணை அமைச்சா் கீா்த்தி வா்த்தன் சிங் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:
கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக மயிலாடுதுறையிலும் தஞ்சாவூரிலும் புதிய அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் மதிப்பீடுக்கான அவகாசத்தை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் நீட்டித்துள்ளது.
2020ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி வெளியிடப்பட்ட அமைச்சக அறிவிக்கையின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சாா்பில் 20 அகழ்வுக்கிணறுகளை துளையிட ஒரு விண்ணப்பமும் நாகப்பட்டினம் மற்றும் கடலூா் மாவட்டங்களிலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் வேதாந்தா நிறுவனம் சாா்பில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு ஒரு விண்ணப்பமும் கடலூா் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு ஒரு விண்ணப்பமும் அளிக்கப்பட்டுள்ளன. அவை தமிழக சுற்றுச்சூழல் விளைவுகள் மதிப்பீட்டு ஆணையம் வசம் நிலுவையில் உள்ளன.
சுற்றுச்சூழல் நுட்ப மண்டலம், சுற்றுச்சூழல் நுட்ப பகுதிகள் என வகைப்படுத்தப்பட்ட இடங்களில் முன்மொழியப்படும் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் மீது மாநில அரசின் அனுமதி அடிப்படையிலேயே மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். அந்த வகையில் தமிழக அரசிடம் இருந்து எந்தவொரு முன்மொழிவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக வரவில்லை என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.