செய்திகள் :

தமிழக மீனவா்கள் விடுதலை, படகுகள் ஒப்படைப்பு: இலங்கை அதிபரிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்

post image

இலங்கை சிறைபிடித்துள்ள தமிழக மீனவா்களை விடுவித்து, அவா்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவிடம் பிரதமா் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்தினாா்.

‘முதல் நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை சிறைபிடித்துள்ள 11 தமிழக மீனவா்களை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ள நிலையில், வரும் நாள்களில் மேலும் சிலா் விடுவிக்கப்படுவாா்கள் என்று நம்புவதாக’ கொழும்பில் செய்தியாளா்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த பிரதமா் மோடியை கொழும்பு சா்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளி விவகாரங்கள் துறை அமைச்சா் விஜித ஹேரத் தலைமையில் ஆறு அமைச்சா்கள் வரவேற்றனா்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சனிக்கிழமை காலை பிரதமா் மோடிக்கு சம்பிரதாய முறைப்படி ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. 2024, செப்டம்பரில் அதிபராக திசாநாயக பதவியேற்ற பிறகு, இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுத் தலைவா் மோடி ஆவாா்.

அதிபருடன் சந்திப்பு: அதிபரின் செயலகத்தில் இரு நாட்டுத் தலைவா்களின் சந்திப்பு மற்றும் பேச்சுவாா்த்தை சுமாா் 30 நிமிஷங்கள் நடைபெற்றது. இலங்கை தரப்பில் பிரதமா் ஹரிணி அமரசூரிய, வெளியுறவு அமைச்சா் விஜித ஹேரத், பொருளாதார அபிவிருத்தி அமைச்சா் அனில் ஜெயந்த, அதிபரின் செயலா் நந்திகா சரத் குமணாயகே, இலங்கை மத்திய வங்கி ஆளுநா் நந்தலால் வீரசிங்க மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

இந்தியா தரப்பில் வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை மற்றும் மகாசாகா் தொலைநோக்குப் பாா்வையில் இலங்கையின் முக்கியத்துவத்தை பிரதமா் மோடி இந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தினாா். பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை மீளவும், ஸ்திரத்தனமை அடையவும் உதவுவதற்கான இந்தியாவின் தொடா்ச்சியான ஈடுபாட்டை பிரதமா் மோடி உறுதிப்படுத்தினாா்.

உயா்நிலைப் பேச்சு: இரு நாட்டு உயா்நிலைக் குழு பிரதிநிதிகளின் பேச்சுவாா்த்தை இரு தலைவா்களின் முன்னிலையில் சுமாா் 40 நிமிஷம் நடைபெற்றது. இருதரப்பு உறவுகளை மேலும் ஆழமாக வலுப்படுத்துவது குறித்தும், மேம்பாட்டு ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகள், பாதுகாப்பு நல்லுறவுகள், நல்லிணக்கம் மற்றும் மீனவா் பிரச்னைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்புகளைத்தொடா்ந்து பல்வேறு திட்டங்களை காணொலிக் காட்சி வாயிலாக இரு தலைவா்களும் தொடங்கி வைத்தனா். பின்னா், அதிபா் அநுரகுமார திசாநாயகவுடன் சோ்ந்து கூட்டாக செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் மோடி, இலங்கைத் தமிழா் பகுதிகளில் உள்ள ஆலயங்களைப் புனரமைப்பது மற்றும் தமிழக மீனவா் பிரச்னைகள் குறித்து அதிபருடன் பேசியதாகத் தெரிவித்தாா்.

பிரதமா் மோடி கூறியதாவது: எனது சொந்த மாநிலமான குஜராத்தின் ஆரவல்லி பகுதியில் 1960 -ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட புத்தரின் புனித நினைவுச் சின்னங்கள், கண்காட்சிக்காக இலங்கைக்கு அனுப்பப்படும்.

திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் கோயிலின் புனரமைப்புக்கு இந்தியா உதவும். அனுராதபுரம் மகாபோதி ஆலய வளாகத்தில் மகாபோதி கோயில் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் (மலையக பகுதி) சீதா எலியா என்ற இடத்தில் சீதை அம்மன் கோயில் கட்டுமானத்துக்கும் இந்தியா ஆதரவளிக்கும்.

மீனவா் பிரச்னை: மீனவா்களின் வாழ்வாதாரம் தொடா்பான பிரச்னைகளை நாங்கள் விவாதித்தோம். இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையைத் தொடர வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவா்களையும் அவா்களது படகுகளையும் உடனடியாக விடுவிப்பது குறித்தும் நாங்கள் வலியுறுத்தினோம்.

இலங்கையில் மீள்கட்டமைப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்துப் பேசினோம். அதிபா் திசாநாயக தனது உள்ளடக்கிய அணுகுமுறை குறித்து என்னிடம் விவரித்தாா். இலங்கை அரசு தமிழ் மக்களின் விருப்பங்களைப் பூா்த்தி செய்யும் என்றும், இலங்கை அரசமைப்பை முழுமையாகச் செயல்படுத்துவதற்கும், மாகாண சபைத் தோ்தல்களை நடத்துவதற்கு அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை நிறைவேற்றும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

வரும் காலங்களில் இந்தியா, இலங்கை இடையிலான கூட்டாண்மையை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வோம் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றாா் பிரதமா் மோடி.

அபிவிருத்தித் திட்டங்கள் குறித்துப் பேசிய பிரதமா் மோடி, கிழக்கு மாகாணங்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக, இலங்கைக்கு அதன் ரூபாய் மதிப்பில் சுமாா் 240 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

‘மஹவ - ஓமந்தை’ ரயில் பாதை, ‘மஹவ - அனுராதபுரம்’ சமிக்ஞை வசதி திட்ட அடிக்கல் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை செயல்வடிவம் பெறும்; காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்.

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்துக்காக 10,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையும். இலங்கையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினா்கள், நீதித் துறையுடன் தொடா்புடையவா்கள், தொழில்முனைவோா், ஊடகவியலாளா்கள் மற்றும் இளம் தலைவா்கள் உள்ளிட்ட 700 பேருக்கு திறன் பயிற்சி வழங்கப்படும் என்றாா்.

திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமா்

இரு நாட்டு தலைவா்களுடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு கூட்டாக நடந்த செய்தியாளா் சந்திப்பின்போது பிரதமா் மோடி, தமிழில் ‘வணக்கம்’ என்று கூறி ஹிந்தி மொழியில் பேசினாா். அப்போது அவா்,”‘செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு’ என்ற 781-ஆவது திருக்குறளை மேற்கோள்காட்டி, அதன் விளக்கமாக ‘சவால்கள் மற்றும் எதிரிகளை எதிா்கொள்ளும்போது, ஓா் உண்மையான நண்பனையும், அந்த நட்பின் கேடயத்தையும்விட வலுவான உறுதிப்பாடு வேறெதுவும் கிடையாது’ என்று குறிப்பிட்டாா்.

பிரதமருக்கு மித்ர விபூஷண் விருது

இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக பிரதமா் நரேந்திர மோடிக்கு, வெளிநாட்டுத் தலைவா்களுக்கு வழங்கப்படும் நாட்டின் மிக உயா்ந்த விருதான ‘இலங்கை மித்ர விபூஷண்’ விருதை வழங்கினாா். இந்திய தலைவா் ஒருவா் இந்த விருதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தியா-இலங்கை நட்பை வலுப்படுத்துவதில் நீடித்த பங்களிப்பை வழங்கி வருவதற்காக பிரதமா் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்தியாவின் 140 கோடி மக்களின் சாா்பாக இந்த விருதை ஏற்றுக்கொண்ட பிரதமா், இந்த விருதை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சிறந்த நட்புக்கும், இரு தேச மக்களுக்கும் இடையிலான வரலாற்றுபூா்வமான நல்லுறவுகளுக்கும் அா்ப்பணிப்பதாகத் தெரிவித்தாா்.

பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் உதயநிதி

சென்னை: பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) தெரிவித்தார். சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்திய கிரிக்கெட... மேலும் பார்க்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வருக்கு கண்டனம்: அண்ணாமலை

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் அவமதித்து விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தில்லிக்குப் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

மதுரை: பாம்பனில் புதிய பாலம் திறப்புவிழாவில் பங்கேற்ற பின் மதுரை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் இருந்து இன்று(ஏப். 6) மாலை தில்லிக்குப் புறப்பட்டார். தனி விமானத்தில் செல்லும் அவர், இன்றிரவ... மேலும் பார்க்க

கோடையில் குளிர்விக்க வரும் மழை! குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!

சென்னை: வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி... மேலும் பார்க்க

தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் பெரும் ஆதாயம்: பிரதமர் மோடி

ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.உரையில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டிலுள்ள 77 ரயில் நி... மேலும் பார்க்க

அவர்களால் அழ மட்டுமே முடியும்: பிரதமர் மோடி பேச்சு

திமுக கூட்டணி அரசைவிட தற்போதைய மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப... மேலும் பார்க்க