விராட் கோலியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது... மனம் திறந்த இளம் ஆர்சிபி வீரர்!
இரட்டிப்புப் பணம் தருவதாக ரூ.3 கோடி மோசடி: நிதி நிறுவன உரிமையாளர் கைது!
ஆவடி: ஆவடியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி இரட்டிப்பாக்கி பணம் தருவதாகக் கூறி, ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில், நிறுவன உரிமையாளரை ஆவடி போலீஸார் சனிக்கிழமை(ஏப். 6) கைது செய்தனர்.
ஆவடி, காமராஜர் நகர் பிரதான சாலையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் ராணிப்பேட்டை, திரு வி.க நகர், 5-ஆவது தெருவைச் சேர்ந்த குப்பன் என்ற பிரவீன்ராஜ் 54. இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால், குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்புப் பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் அவர்கள் செலுத்திய பணத்திற்கு இரட்டிப்புப் பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பணம் செலுத்தியவர்கள் பலமுறை நிறுவனத்தை அணுகி பணத்தைக் கேட்ட போது, அவர்கள் பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர்.
தொடர்ந்து நிதி நிறுவனத்தின் உரிமையாளர் பிரவீன்ராஜ் தலைமுறைவாகி விட்டார். இது குறித்து ராணிப்பேட்டை, வாலாஜா வட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அமுதா (39) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் ஆவடி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தனர். காவல் உதவி ஆய்வாளர் ராஜு தலைமையில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில் பிரவீன்ராஜ் இரட்டிப்புப் பணம் தருவதாக கூறி சுமார் ரூ.3 கோடி வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீஸார் அவரைத் தேடி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பிரவீன்ராஜை பிடித்து சனிக்கிழமை (ஏப்.5) காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு போலீஸார் பிரவீன்ராஜை (படம்) கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.