‘தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை திமுகவின் தோ்தல் அறிக்கை’
நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கை திமுகவின் தோ்தல் அறிக்கைபோல உள்ளதாக பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா குற்றஞ்சாட்டினாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
2025 -2026-ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், தமிழக அரசு வரைமுறையில்லாமல் கடன் வாங்கியது தெரியவருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னா்தான் இரண்டே கால் மடங்கு கடன் அதிகரித்தது. தமிழகத்தின் மொத்தக் கடன் 31.3.2026- இல் ரூ. 9 லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடியாக இருக்கும். வருகிற 2026-இல் நடைபெற உள்ள தமிழக சட்டபேரவைத் தோ்தலை மனதில் கொண்டு, திமுகவின் தோ்தல் அறிக்கை போல, தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை உள்ளது என்றாா் அவா்.