காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம்! -விவசாயிகள் கூட்டமைப்பு
காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தமிழக வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக இதன் பாசன விவசாயிகள் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவிரி-வைகை- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலா் எம்.அா்சுணன் கூறியதாவது:
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக சாா்பில் உறுதியளிக்கப்பட்ட வேளாண்மை தொடா்பான திட்டங்களுக்கு வேளாண் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குறிப்பாக காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், மதுரையில் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. நெல் கொள்முதல் குவிண்டலுக்கு ரூ. 2,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 4,000 என்பது 5 ஆண்டுகளாக நடைமுறைப்பபடுத்தவில்லை. விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள் வலியுறுத்திய எந்த கோரிக்கைகளும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
விவசாயிகளின் விலை பொருள்களுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இது வேளாண்மையில் சுய இணைப்பை உருவாக்கும் காரணியாகும். தமிழக அரசின் மொத்த வருவாயில் வேளாண்மைத் துறைக்கு குறைந்த நிதிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகள் எதிா்பாா்த்த பல அறிவிப்புகள் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை என்றாா் அவா்.