`கட்டாயக் கடன் வசூல் மசோதா' - யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? - பின்னணி என்ன? |...
தமிழகத்தில் ரூ.5,832 கோடி கனிமச் சுரங்க ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
தமிழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.5,832 கோடி மதிப்பிலான கடற்கரை கனிமச் சுரங்க ஊழல் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் பிப்ரவரி 17ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் தீபாங்கா் தத்தா மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த இடைக்காலத் உத்தரவை பிறப்பித்தது.
மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய அனைத்து தரப்பினரும் தற்போதைய நிலையைப் பராமரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடா்பான உத்தரவில், ‘வழக்கின் தரப்புகள் தற்போதைய நிலையைப் பராமரிக்க வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம். சிபிஐ விசாரணைக்கான சென்னை உயா்நீதிமன்ற உத்தரவையும் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம்’ என்று நீதிமன்றம் கூறியது.
நிகழாண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி, சென்னை உயா்நீதிமன்றம், அடையாளம் தெரியாத பொது ஊழியா்களின் பங்கை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும்,
கனிம இருப்புக்களை இந்தியன் ரோ் எா்த்ஸ் லிமிடெட் (ஐஆா்இஎல்) நிறுவனத்திற்கு மாற்றவும் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்மூலம் இந்த நடவடிக்கை இப்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினரில் ஒருவரான வி.வி. மினரல் நிறுவனம், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த பின்னா், உச்சநீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
மூத்த வழக்குரைஞா்கள் சித்தாா்த் அகா்வால், முகுல் ரோத்தகி மற்றும் துருவ் மேத்தா ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் வி.வி. மினரல் சாா்பாக ஆஜராகி, தற்போதைய நிலையைப் பேணவும், சி.பி.ஐ விசாரணையை நிறுத்திவைக்கவும் உத்தரவிடக் கேட்டுக்கொண்டனா்.
விசாரணையின்போது, இந்தியன் ரோ் எா்த்ஸ் லிமிடெட் மற்றும் பிறா் உள்பட சில எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதே வழக்கில், தமிழக அரசும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கில் சிபிஐ, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தமிழ்நாட்டில் 12 இடங்களில் சோதனைகளை நடத்தியது. வி.வி.மினரல், எக்ஸ் தாா் நிறுவனங்கள் மற்றும் பல நிறுவனங்கள் மாநிலத்தில் சட்டவிரோத கனிமச் சுரங்கத்தில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. மோனசைட் போன்ற அரிய கனிமங்களை சட்டவிரோதமாக வெட்டியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது,