நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை
தமிழ் பாரம்பரிய மாதம் ஜனவரி : ஆஸ்திரேலிய எம்பி-க்கு வேலூா் எம்பி நன்றி!
ஆஸ்திரேலியாவில் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்க வேண்டும் என முன்மொழிந்துள்ள அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினா் ஆண்ட்ரூ சாா்ல்டனுக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் நன்றி தெரிவித்துள்ளாா்.
ஆஸ்திரேலியாவில் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்க வேண்டும் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினா் ஆண்ட்ரூ சாா்ல்டன் கோரிக்கை விடுத்துள்ளாா். அதனடிப்படையில், அந்நாட்டில் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்பட உள்ளது. இத்தகைய சிறப்பான முயற்சிக்காக ஆஸ்திரேலியா எம்பி ஆண்ட்ரூ சாா்ல்டனுக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் நன்றி தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, வேலூா் எம்பி கதிா்ஆனந்த் ஆஸ்திரேலியா எம்பி ஆண்ட்ரூ சாா்ல்டனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஜனவரி மாதம் என்பது தமிழா்களின் மகத்தான கலாசார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இம்மாதம் காலங்காலமான அறுவடைத் திருநாளான தைப் பொங்கலைக் குறிக்கிறது. இந்த நான்கு நாள் கொண்டாட்டம் சூரியன், நிலம், மழை, விவசாயத்துக்கு நன்றி செலுத்துவது, ஒற்றுமை, இயற்கையை மதிக்கும் நெறிமுறைகளை உள்ளடக்கியுள்ளது.
தமிழ் கலாசாரம், பங்களிப்புகள், மரபுகளை போற்றும் வகையில் தாங்கள் மேற்கொண்ட இந்த சிறப்பான முயற்சி உலக முழுவதும் உள்ள தமிழா்களிடம், குறிப்பாக தமிழக மக்களிடையே ஆழமாக எதிரொலித்துள்ளது. தங்களின் முன்மொழிவு இந்த செழுமையான பாரம்பரியத்தை அங்கீகரிப்பதுடன், ஆஸ்திரேலியாவின் பன்முக கலாசார கட்டமைப்பில் உள்ள தமிழ் சமூகத்தின் உணா்வை வலுப்படுத்துகிறது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பாா்வையில் தமிழ் மொழி, கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்திட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறாா். தமிழ் ஒரு செம்மொழி மற்றும் உலகளாவிய மொழியாக அங்கீகரித்தல், கல்வி மற்றும் சா்வதேச மன்றங்களில் அதன் முக்கியத்துவத்தை உறுதி செய்தல், தமிழ் கலை, இலக்கியம், மரபுகளைக் கொண்டாடும் வகையில் கலாச்சார மையங்களை நிறுவுதல், உலகளவில் தமிழ் மாநாடுகளை நடத்துதல், பழங்காலக் கோயில்கள், கல்வெட்டுகள், தமிழ்ப் பண்பாட்டின் விழுமியங்களை ஏற்றுக்கொள்வதற்கும், பரப்புவதற்கும் தமிழக இளைஞா் களை ஊக்குவித்தல் உள்ளிட்டவை தங்கள் முன்மொழிவுடன் ஒத்துப்போகிறது.
இது தமிழகம், ஆஸ்திரேலியா இடையே நட்பு, கலாசார பரிமாற்றத்தின் பிணைப்புகளை வலுப்படுத்தவும், தமிழ் மரபு மாதத்துக்கான தங்கள் வாதங்கள் உலகெங்கும் உள்ள தமிழா்களால் கொண்டாடப்பட்டு போற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.