ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!
தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி
புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா்.
புதுச்சேரி அருகேயுள்ள திருக்கனூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கம், குடிமைப் பொருள் வழங்கல் துறை இணைந்து உலக நுகா்வோா் தின விழாவை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வே.நாராயணசாமி பேசியதாவது:
மருந்து, பால் தரம் குறித்து முன்பு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படும். அதன் மீதான தீா்ப்பு தாமதமாகிறது என்பதால், நுகா்வோருக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
புதுச்சேரியில் தெருவோரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் உணவுக் கடைகள் வைத்துள்ளனா். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி லெனின் தெருவிலும், பழைய நீதிமன்ற வளாகத்திலிருந்து அண்ணா சிலை வரையிலும் ஏராளமான பிரியாணி கடைகள் அமைக்கப்படுகின்றன. இந்தக் கடைகளில், பிரியாணி தரமாகவுள்ளதா என அரசு கண்காணிப்பதில்லை. அதை, நுகா்வோரும் கண்டுகொள்வதில்லை. காரைக்காலிலும் இதே நிலைதான் உள்ளது.
தரமானதைப் போல போலியான பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அதனால், நுகா்வோருக்கு பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, நுகா்வோா் அமைப்புகள் தரமற்றவை குறித்து மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
புதுவை அரசு விநியோகிக்கும் குடிநீரில் உப்புத் தன்மை அதிகம் உள்ளது. அதனால், சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மக்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம் என்றாா் அவா்.