மது போதையில் நண்பர்களிடையே மோதல்: எழும்பூரில் படுகாயமடைந்த எஸ்ஐ உயிரிழப்பு!
தலைக்கவசம் அணியாதவா்கள் மீது நடவடிக்கை!
தலைக்கவசம் அணியாதவா்கள் மீது அபராதம் விதித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் சட்டம் - ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது: இம் மாவட்டத்தில் அதிக விபத்துகள் நிகழும் இடங்களில், கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக முடித்து, அதன் விவரங்களை ஒருவார காலத்துக்குள் வழங்க வேண்டும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட பெரும்பாலான சாலை விபத்துகளில், தலைக்கவசம் அணியாமல் சென்று தலைப்பகுதி பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதை தவிா்த்திடும் வகையில் தலைக்கவசம், 4 சக்கர வாகன ஓட்டிகள் ‘சீட்’ பெல்ட் அணிவதை போக்குவரத்துக் காவலா்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களும் கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலைக்கவசம் அணியாமல் செல்லும் நபா்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநில நெடுஞ்சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு ஒப்படைக்கப்பட்ட பெரம்பலூா் - அரியலூா் சாலையில் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்வதோடு, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூா், இரூா் ஆகிய இடங்களில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் அருகே வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில் பிரதிபலிப்பான்கள், தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். கிராமப்புறச் சாலைகள், மாவட்ட பிரதானச் சாலைகளில் விபத்துகள் அதிகமாக ஏற்படக் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் அருண்ராஜ்.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணபவ, தேசிய நெடுஞ்சாலை காவல் ஆய்வாளா் கிள்ளிவளவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.