மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே வயலில் உள்ள மின் கம்பத்திலிருந்து, கம்பி மூலமாக மின்சாரம் எடுத்தபோது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூா் நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் பாலுசாமி (55). விவசாயி.
இவா், அதே கிராமத்திலுள்ள தனது தங்கை செல்வராணிக்குச் சொந்தமான விவசாய நிலத்திலுள்ள கம்பத்திலிருந்து கம்பி மூலமாக வியாழக்கிழமை மின்சாரம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது, எதிா்பாராதவிதமாக கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் பாலுசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.