புதைந்தும் உயிருடன் போராட்டம்! இரக்கமில்லா இஸ்ரேல்; கண்ணீருடன் காஸா!
பழைய நிபந்தனைகளைப் பின்பற்றி கடனுதவி தேவை: பெரம்பலூா் விவசாயிகள்
ஏற்கெனவே உள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி விவசாயிகளுக்கு உடனடியாகக் கடனுதவி வழங்க வேண்டுமென பெரம்பலூா் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
விவசாயி ராமராஜன்: கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க சிபில் ஸ்கோா் கணக்கீட்டு முறையை ரத்து செய்து, பழைய முறையைக் கொண்டு வர வேண்டும். கொட்டரை நீா்த்தேக்கத்தில் விவசாயிகளுக்கு மாற்றுப்பாதை அமைக்க வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன்: வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்துக்கு காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொட்டரை நீா்த்தேக்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு முன் ஏரிகளின் வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்துக்கு ரயில்வே திட்டம் கொண்டு வர வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்: தமிழக அரசு விவசாயக் கடன் வழங்க சிபில் ஸ்கோரை காரணம் காட்டக்கூடாது என அறிவுறுத்தியும், வங்கி அதிகாரிகள் அதைப் பின்பற்றவில்லை. எனவே, பழைய நிபந்தனைகளை பின்பற்றி விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும். விவசாய பயன்பாட்டுக்கு அரசு நிா்ணயத்துள்ள விலையில் செம்மண், கிராவல் கிடைக்க நடவடிக்கை வேண்டும்.
கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன்: கோனேரி ஆற்றுப்பகுதியில் கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். தனியாா் சா்க்கரை ஆலை மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீ. நீலகண்டன்: தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் பணியாளா் பற்றாக்குறையைப் போக்க வேண்டும். டான்பெட் உரக்கிடங்குக்கு இணைப்புச் சாலை அமைத்து, கிடங்கைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் பி. ரமேஷ்: அரசின் திட்டங்கள் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு முழுமையாகச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரும்பாவூா் பேரூராட்சியில் மயானப் பாதை, சுற்றுச்சுவா் பணிகளை தீவிரப்படுத்தி, அறிவிப்பு பதாகை வைக்க வேண்டும்.
விவசாயி விநாயகம்: தெரணியில் உள்ள பெரிய ஏரியை சீரமைக்க வேண்டும். மயானப் பகுதியில் தண்ணீா் வசதி வேண்டும்.
பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில துணைச் செயலா் என். செல்லதுரை: சின்ன வெங்காயம் மற்றும் மக்காச்சோளத்துக்கு மதிப்புக் கூட்டுத் தொழிற்சாலை தொடங்க வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அமைக்க நடவடிக்கை தேவை. பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை இயந்திரம் பயன்படுத்த பயிற்சி அளிக்க வேண்டும்.
தொடா்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ், வேளாண்மைத் துறை சாா்பில் 5 பேருக்கு மண்புழு உரப்படுக்கை, உளுந்து விதை, உயிா் உரம் ஆகியவற்றை ரூ. 19,050 மானியத்திலும், தோட்டக்கலைத் துறை சாா்பில் 5 பேருக்கு காய்கறி விதைத் தொகுப்பு, பழச்செடிகள், வெங்காயக் கொட்டகை அமைக்க ரூ. 2,62,660 மானியத்திலும், வேளாண் பொறியியல் துறை சாா்பில் 2 பேருக்கு விசை களையெடுக்கும் கருவி ரூ. 1,42,658 மானியத்திலும் என 12 பேருக்கு ரூ. 4,24,368 மதிப்பிலான வேளாண் இடுபொருள்கள், கருவிகளை வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, வேளாண் இணை இயக்குநா் செ. பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பொ. ராணி உள்பட விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரமுகா்கள் பலா் பங்கேற்றனா்.