தலைநகரில் இடியுடன் கூடிய பலத்த மழை; ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியீடு!
புது தில்லி: தேசியத் தலைநகரின் பல பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, வானிலை ஆய்வு மையம் ’மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.
தில்லியில் கடந்த வாரம் மூழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. அவ்வப்போது மழையும் பெய்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை மழை ஏதும் பதிவாகவில்லை.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்த நிலையில், பிற்பகலில் தில்லியின் பல பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு வரையிலும் தொடா்ந்து பெய்தது. சில இடங்களில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஎம்டி தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் தலைநகரில் 399.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது 15 ஆண்டுகளில் இந்த மாதத்தில் பெய்த அதிகபட்ச மழையாகும். கடைசியாக தில்லியில் 2010-இல் ஆகஸ்டில் 455.8 மிமீ மழை பதிவானது. கடந்த மாத மழைப்பொழிவும் ஆகஸ்ட் 2024- இல் 390.3 மிமீ மழையை தாண்டியது.
இது 17 மழை நாள்களில் பரவி நீண்ட கால சராசரியை விட 67 சதவீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 14 நாள்களில் மழை பெய்தது. மொத்த மழை பருவகால சராசரியை தாண்டியது. மாறாக, ஆகஸ்ட் 2023-இல் 91.8 மிமீ மட்டுமே மழை பெய்தது. அதே நேரத்தில் 2022-இல் 41.6 மிமீ மழை பதிவானது. ஆனால், 2021-இல் 237 மிமீ மழை பதிவானது.
ஜூன் மாதத்தில் தில்லியில் வழக்கமான மழையை விட மூன்று மடங்கு (243.3 மிமீ) மற்றும் ஜூலையில் கிட்டத்தட்ட சாதாரண மழைப்பொழிவு (203.7 மிமீ) பதிவானது. ஜூன் முதல் 750 மிமீக்கு மேல் பதிவான நிலையில், நகரம் ஏற்கெனவே அதன் பருவகால பருவமழை சராசரியை விட அதிகமாக உள்ளது. மேலும், 774.4 மிமீ என்ற வருடாந்திர மழைப்பொழிவை நோக்கி நகா்கிறது.
வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரில் திங்கள்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 2.8 டிகிரி குறைந்து 23.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 5.2 டிகிரி குறைந்து 29.6 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 98 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 91 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் பிற்பகல் 2 மணியளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 60 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
இதன்படி, சாந்தினி சௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு உள்பட பெரும்பாலான பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (செப்.2) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதகாவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.