ராமோன் மகசேசே விருது: சமூக சேவைக்கான விருதைப் பெறும் NGO; Educate Girls அமைப்பின...
பவானாவில் தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; ஒருவா் காயம்
தில்லியின் பவானாவில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் லேசான காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆணையா் (வெளிப்புற வடக்கு) ஹரேஷ்வா் சுவாமி கூறியதாவது: பவானாவின் டிஎஸ்ஐஐடிசி, செக்டா்-1, தொழிற்சாலை எண் பி 86- இல் இந்தச் சம்பவம் நடந்தது. வெடி விபத்து பற்றிய தகவல் கிடைத்ததை அடுத்து, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.
தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்களுடன் வீரா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். முதல் பாா்வையில் இது சிலிண்டா் அல்லது கம்ப்ரசா் வெடிப்பு என தெரிகிறது. இறந்தவா் உத்தர பிரதேசத்தின் பிஜ்னோா் மாவட்டத்தைச் சோ்ந்த நாஜிம் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்த அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தின் அசம்கரை வசிக்கும் அகிலேஷ் என்ற மற்றொரு தொழிலாளிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா்.
இந்த தொழிற்சாலை நஜீமின் தந்தை நிஜாமுதீன் (60) என்பவருக்குச் சொந்தமானது. அவா் இங்குள்ள பஸ்சிம் விஹாரைச் சோ்ந்தவா். இந்த விவகாரத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) தொடா்புடைய விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று காவல் துணை ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி தெரிவித்தாா்.